டில்லி
வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் 58 விமானங்கள் இயக்க உள்ளதாகா மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக உலகெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவித்தனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டத்தை அறிவித்தது. தற்போது இந்த திட்டத்தின் 2 ஆம் கட்டம் நடந்து வருகிறது.
முதல் கட்ட திட்டம் கடந்த மே 7 ஆம் தேதி முதல் 15 வரை நடந்தது. இதில் 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் பேர் கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர் தற்போதைய இரண்டாம் கட்ட வந்தே பாரத் திட்டம் கடந்த மே மாதம் 17 முதல் 22 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. பிறகு ஜூன் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தற்போது 107 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை மேலும் 58 அதிகரிக்கப்பட உள்ளது. இனி மொத்தம் 165 விமானங்கள் இயங்கும் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை இந்த விமானங்கள் இயக்கப்படும்” என அறிவித்துள்ளார்.