கிளீவ்லன்ட் :
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடேன் ஆகியோருக்கு இடையில் நேரடி விவாதம் இன்று நடந்தது.
கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிபர் டிரம்ப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதாக பைடேன் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப் தொற்று நோயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செயல்படுத்தியுள்ளதாகவும் இல்லையென்றால் பலலட்சம் பேர் உயிரிழந்திருக்க கூடும்.
சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று தெரியாது, அந்த நாடுகள் உண்மையானா புள்ளிவிவரங்களை தரவில்லை என்று கூறினார்.
விவாதத்தில் தொடர்ந்து பேசிய பைடேன் “நாம் கேட்கும் கேள்விகள் எதற்கும் நேரடியான சரியான பதில் கூறமாட்டார், இவர் ஒரு கோமாளி” என்று அதிபர் டிரம்பை விமர்சித்தார்.
அதிபர் டிரம்ப் இதற்கெல்லாம் சளைக்காமல் பைடேன் மகனின் நடத்தை பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கூறி அனல் பறக்க விட்டார். ஒரு கட்டத்தில் ஜோ பைடேன் அதிபர் டிரம்பை பார்த்து ‘வாயை மூடுங்கள்’ என்று கூறினார்.
மேலும், நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக ஒரு வாரம் கழித்து நவம்பர் 10-ம் தேதி நடக்க இருப்பது வாக்காளர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஜோ பைடேன் கேட்டதற்கு, இதில் எந்த குளறுபடியும் இல்லை என்று அதிபர் டிரம்ப் மறுத்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களின் இந்த முதல் கட்ட நேரடி விவாதம் வளர்ச்சி பற்றி பெரிதும் விவாதிக்காமல் குடுமிப்பிடி சண்டையாகவே மாறியது என்று கூறுமளவிற்கு இருந்தது, அடுத்த இரண்டு கட்ட விவாதங்கள் எப்படி இருக்கும் என்று அமெரிக்க வாக்காளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.