வியன்னா: “இந்தியா இந்த உலகுக்கு புத்தரைக் கொடுத்துள்ளது. யுத்தத்தை அல்ல. இந்தியா எப்போதுமே இவ்வுலகுக்கு அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது. அதனால் 21-ம் நூற்றாண்டில் உலக அரங்கில் தனது பங்களிப்பை இந்தியா வலுப்படுத்தவிருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் அந்த ஆஸ்திரியாக நாட்டுக்கு  விஜயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியன்னாவில் புதன்கிழமையன்று புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா சிறந்ததாக இருப்பதற்கும் மிக உயர்ந்த மைல்கற்களை அடைவதற்கும் உழைத்து வருவதாகவும் கூறினார்.

பிரதமர் மோடி ரஷ்யாவில் 2 நாள்அரசு முறை பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு அதிபர் புதினை சந்தித்து பல்வேறு நிகழ்வுகள், இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதித்ததுடன், உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தினார்.

இந்த 2நாள் பயணத்தை முடித்து  நேற்று (ஜூலை 10) ஆஸ்திரியா நாட்டுக்கு  சென்றார்.  அங்கு பிரதமர் மோடி, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை  சந்தித்த பிரதமர் மோடி,   இரு நாட்டு உறவுகள் உள்பட  பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

41 ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஆஸ்திரியாவுக்கு வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா – ஆஸ்திரியா 75 ஆண்டு கால நட்பைக் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

பின்னர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய மோடி, இந்தியா சிறந்ததாகவும், பிரகாசமானதாகவும், மிகப்பெரியதை அடையவும், மிக உயர்ந்த மைல்கற்களை எட்டவும் உழைத்து வருவதாகவும் கூறினார். “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நாங்கள் எங்கள் அறிவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்.

நாங்கள் உலகுக்கு யுத்தத்தை அல்ல; புத்தரைக் கொடுத்துள்ளோம் என்றவர்,  நாங்கள் ‘யுத்த’ (போர்) கொடுக்கவில்லை, உலகிற்கு ‘புத்தரை’ கொடுத்தோம். இந்தியா எப்போதும் அமைதியையும் செழிப்பையும் கொடுத்தது, எனவே  , இந்தியா 21-ம் நூற்றாண்டில் தனது பங்களிப்பை வலுப்படுத்தவிருக்கிறது. என்று மோடி கூறினார்,

இந்தியாவும், ஆஸ்திரியாவும் பூகோள ரீதியாக இருவேறு இடங்களில் இருக்கலாம். ஆனால் ஜனநாயகப் பண்புகள் நம் இரு தேசங்களையும் ஒன்றிணைக்கிறது. சுதந்திரம், சமத்துவம், பன்முகத்தன்மை, சட்டத்தின் மீதான மரியாதை போன்ற ஜனநாயக மதிப்பீடுகளை நாம் பகிர்ந்து கொள்கிறோம். நமது சமூகங்கள் பல கலாசாரங்களையும், பல மொழிகளையும் கொண்டவையாக உள்ளன. இரு தேசங்களும் பன்முகத்தன்மையை கொண்டாடுகின்றன.

இந்தியாவில் நடந்த தேர்தல், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் 650 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய தேர்தல் நடந்தும், சில மணி நேரங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

இதுதான் எங்கள் தேர்தல் அமைப்பு மற்றும் எங்கள் ஜனநாயகத்தின் பலம். இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். பன்முகத்தன்மை கொண்ட இந்த போட்டிக்குப் பிறகுதான் மக்கள் தங்கள் ஆணையை வழங்கினர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தியாவில் ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இன்று இந்தியா 8% வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்போது 5வது பலமான பொருளாதாரமாக இருக்கிறோம். விரைவில் 3வது இடத்துக்கு முன்னேறுவோம்.  அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.. இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புகளை ஆஸ்திரிய தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அரசியல் நிலைத்தன்மை, சிறந்த கொள்கைகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றால் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்லும். 2047-ல் இந்தியா 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும். அப்போது 3வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா-ஆஸ்திரியா இடையேயான புத்தொழில் ஒத்துழைப்பு சிறந்த பலன்களை அளிக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்னர் வியன்னா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம் என்றவர்,  இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்தியாவின் சிறந்த வளர்ச்சி சூழலில் ஒரு பகுதியாக பங்கேற்குமாறும் ஆஸ்திரிய தொழில் துறையினருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஆஸ்திரியாவில் 31,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சேவை துறையில் உள்ளனர். சிலர் ஐ.நா. அமைப்புகளிலும் பிற துறைகளிலும் பணியாற்றுகின்றனர். ஆஸ்திரியாவில் 500 இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில்கின்றனர்.

தனது முதல் ஆஸ்திரியா பயணம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கூறிய மோடி, 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

மாஸ்கோவில் இருந்து இங்கு வந்த ஒரு நாள் கழித்து, ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வைக் காண்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.