புதுடெல்லி:

இந்தியாவில் 7% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


சிஎன்பிசி-டிவி 18 -க்கு அவர் அளித்த பேட்டியில், நீங்கள் நிதி அமைச்சராக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ரகுராம் ராஜன் “நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலைத் தீர்ப்பேன், வங்கிகளில் உள்ள பிரச்சசினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவேன், விவசாயக் கொள்கைகளை மறு ஆய்வு செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில் மத்திய அரசின் இடையூறுகள் உள்ளதா? என்ற கேள்விக்கு ‘பெரிய அளவில் இல்லை என்றும், அவ்வப்போது இருவருக்கும், பிரச்சனைகள் எழும்’ என்றார்.

வேலை வாய்ப்பின்மையை போக்குவதற்கு மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை, இளைஞர்கள் வேலையைத் தேடுகிறார்கள், பணமதிப்பால் நடந்தது என்ன என்று மத்திய அரசு விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், “உண்மையான ஏழைகளுக்கு நேரடியாக வருவாய் சென்றால் இந்த திட்டம் சாத்தியம்தான். இந்தியாவில் ஏழை என்பதற்கு பல்வேறு மதிப்பீடுகள் உள்ளன. இது தொடர்பாக சர்ச்சைகளும் உள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய பொருளாதாரம் 7% உயரும் என்பது சந்தேகமாக உள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி குறித்த குழப்பத்தை பொருளாதார நிபுணர்கள்தான் தீர்க்க வேண்டும்.

வேலை வாய்ப்பு குறித்து நாம் வைத்துள்ள தகவல்களை மேம்படுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஆணையம் வைத்துள்ள தகவல்களை நாம் முழுமையாக நம்ப முடியாது என்றும் ரகுராம் ராஜன் கூறியிருந்தார்.