டெல்லி
கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்தை இந்தியா மனிதாபிமான அடிப்படையில் வழங்கவுள்ளது. இதனை அரசியலாக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலகின் சில நாடுகள் கொரோனா தொற்று சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோ குவினை பயன்படுத்தி வருகிறது. எனவே மார்ச் மாத தொடக்கத்தில் மத்திய அரசு குளோரோ குவின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால் இந்தியா, குளோரோ குவின் மீதான தடையை நீக்கி தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டார்.
மேலும் தடையை நீக்க மறுத்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கும் தொனியில் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நம் நாட்டில் நாள்தோறும் அதிக அளவில் கொரோனாத் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். ஆயினும் தற்போது அமெரிக்காவிற்கு இம்மருந்தினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட வெளியுறவு அமைச்சகம், “மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் மருந்துகளை வழங்க உள்ளோம். இதனை அரசியலாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளது.