அபுதாபி:
கொரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏழு டன் மருத்துவப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை அதிகரிக்க முற்படும் நாடுகளுக்கு, தேவையான உதவிகளை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் உறுதிபூண்டுள்ளது.
இது குறித்து டாக்டர் அகமது அப்துல் தெரிவிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவுக்கு உதவி புரிவது, இரு நாடுகளிடையே பல ஆண்டுகளாக பகிர்ந்து கொண்ட ஆழமான மற்றும் சகோதர உறவுகளை அங்கீகரிப்பதாகும்” என்று கூறினார்.
இது குறித்து இந்தியாவுக்கான அமீரக தூதர் ரஹ்மான் அல்பன்னா கூறுகையில், இந்தியாவுக்கு, 7,000 டன் மருத்துவ பொருட்கள் அனுப்புவது, கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடஉதவியாக இருக்கும் என்றார்.
மேலும் பேசிய அவர், உலகளவில் கொரோனாவை எதிர்த்துப் போராடுவது ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த போராடி வரும் மற்ற நாடுகளின் முயற்சிகளுக்கு அமீரகம் உதவ தயாராக உள்ளது என்றும், எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம் என்றும் அல்பன்னா கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை 34 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 348 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மருத்துவ பொருட்களை சப்ளை செய்து உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.