ஜெனீவா:

ஐநா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பானை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.


ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, ஐநாவுக்கான பிரான்ஸின் நிரந்தர பிரதிநிதி பிரான்கோயிஸ் டெலட்ரே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகள் இருப்பது காலத்தின் கட்டாயம்.

சமகால உண்மைகளை பிரதிபலிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மற்றும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம். இதில் கேள்விக்கே இடம் இல்லை. இது ஒரு முக்கியமான விஷயம்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஐநாவுக்கான இந்திய தூதரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரான்சு கருத்து கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக உறுப்பு நாடுகளும் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. இருப்பினும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் உள்ளன. தற்காலிக உறுப்பினர்களாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 நாடுகள் உள்ளன. இந்த 10 தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு, அந்த இடத்துக்கு வேறு நாடுகள் தேர்வு செய்யப்படும்” என்றார்.

ஐநா.சபைக்கான இந்திய தூதரகத்தின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் கூறும்போது,
“இந்த ஆண்டுக்குள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் சரிசமமான பிரதிநிதித்துவம் அளிப்பது போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

21-ம் நூற்றாண்டில் உலகளாவிய பிரச்சினைகள் சவாலாக உள்ளன. அவற்றை எதிர்கொள்வதில் உலகம் பிரிந்து கிடக்கிறது” என்றார்.