டில்லி

ந்திய அரசு நாட்டில் உள்ள 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற ஒரு வாரம் கெடு விதித்துள்ளது. 

தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.

இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது.  கனடா எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை.  மாறாகக் கனடாவில் உள்ள இந்தியத் தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.

இரு நாடுகளும் இதைத் தொடர்ந்து மாறிமாறி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா கனடா நாட்டை சேர்ந்தோருக்கு விசா வழங்கப்படாது என அறிவித்துள்ளது.  இந்தியா தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் 10-ந் தேதிக்குள் அதாவது ஒரு வாரத்தில் 41 தூதர்களைத் திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கனடா தூதர்கள் அதற்கு பிறகும் தங்கி இருந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு மொத்தம் 61 கனடா தூதர்கள் உள்ளனர்.  இதில் 41 தூதர்களைத் திரும்பப் பெற இந்தியா உத்தரவிட்டுள்ளதாக்க கூறப்படுகிறது.