புதுடெல்லி:
நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இன்று வரை (ஜூன் 30ம்- தேதி) ஊரடங்கு ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்தநிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 6-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு மற்றும் தளர்வை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளும், குறைவான பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1) நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜூலை 31 வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன், தொலைதூரக் கல்வி வகுப்புகள் நடத்தலாம்.
2) நாடு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்கள், கலாச்சார மற்றும் மத ரீதியான அமைப்புகள் திறக்க ஜூலை 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
3) வந்தேபாரத் மிஷன் தவிர மற்ற வெளிநாட்டு விமான பயணங்களுக்கு தடை
3) மெட்ரோ ரயில் சேவைக்கு தடை
4) சினிமா, உடற்பயிற்சிகூடம், நீச்சல் குளம், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு மற்றும் பயிற்சி பகுதிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
5) அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மத, கலாச்சார நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு தடை
6) உள்ளூர் விமானப் போக்குவரத்துக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக சேவை வழங்கும் வகையில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடரும்.
7) இரவு நேர ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்க வேண்டும்.
8) கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். அதனை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
9) கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு முழு அளவில் பின்பற்றப்பட வேண்டும்.
10) கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.
11) கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மக்களின் நடமாட்டத்தை கூடுமான வரையில் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
12) வீடுகள் தோறும் சோதனை நடத்தி கரோனா தொற்றுள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்.
13) கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளையொட்டியுள்ள பகுதிகளில் அதிகரிக்க கூடும் என்பதால் அந்த பகுதிகளை கண்டறிந்து அங்கு அடுத்தபடியாக கரோனா தொற்று பரவாமல் தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14) அதேசமயம் மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் சரக்கு போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை.
15) புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே உள்ளபடி தொடரும்.அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
16) 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மற்றும் வேறுபல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் தேவையற்ற பயணம் மேற்கொள்ளக்கூடாது.
17) அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதன் மூலம் கரோனா பரவலை தடுக்க வேண்டும்.
18) மாநிலங்களும், யூனியன் பிரதேச அரசுகளும் தேசிய பேரிடர் சட்டத்தின் இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
19) விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
20) இதுபோலவே கரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.