டில்லி

போயிங் 737 மாக்ஸ் விமானத்தை இந்தியா இன்னும் தடை செய்யாமல் உள்ளது.

எதியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவன போயிங் 737 மாக்ஸ் ரக விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி விமானத்தில் இருந்த அனைவரும் மரணம் அடைந்தனர்.  கடந்த அக்டோபர் மாதம் இந்தோநேசியாவில் இதே ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 189 பேரும் மரணம் அடைந்தனர்.   இதை ஒட்டி இந்த ரக விமானத்துக்கு சீனா இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் போயிங் விமானத்தை தங்கள் சேவைக்கு பயன்படுத்தி வருகின்றன.   இந்த நிறுவனங்கள் போயிங் விமானம் உபயோகப்படுத்துவதை தடை செய்வது குறித்து எவ்வித தகவலும் அளிக்கவில்லை.

இதில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் 13 போயிங் 737 ரக விமானங்களும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 5 விமானங்களும் உள்ளன.   இதில் ஜெட் ஏர்வேஸ் வசமுள்ள போயிங் 737 விமானங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை நிலுவையில் உள்ளதால் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து விமான பயணத்துறை இயக்குனர், “நாங்கள் போயிங் 737 மாக்ஸ் விமானம் வைத்திருக்கும் விமான நிறுவனங்களிடம் விமான சேவை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்கலை கேட்டுள்ளோம்.  அத்துடன் எங்கள் அதிகாரி ஒருவர் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்களின் பாதுகாப்பு அறிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.  இப்போதைக்கு போயிங் விமானத்துக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.