இந்தியா மற்ற நாடுகளை விட வேகமாக பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உலகின் வல்லரசு நாடுகளின் வரிசையில் இணைவதற்கு தகுதியான நாடு என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-வின் சோச்சி நகரில் வால்டாய் மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிபர் புடின் இவ்வாறு பேசினார்.
இந்தியாவுடனான அனைத்து வழிகளிலும் ரஷ்யா தனது உறவை மேம்படுத்தி வருவதாக தெரிவித்த அவர் இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு பரஸ்பரம் சுமூகமாக உள்ளதாகக் கூறினார்.
சுமார் 150 கோடி மக்கள்தொகை கொண்ட முன்னணி நாடாக இந்தியா உள்ளது. உலகின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் ராணுவத்தில் ஏராளமான ரஷ்ய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், கூட்டாக ஆயுத உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவதாக அப்போது அவர் கூறினார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை இருப்பது உண்மைதான். “புத்திசாலி மக்கள் தங்கள் தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள் மற்றும் பேச்சுவார்த்தைக்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்,” என்று தெரிவித்தார்.