டெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுடனான அனைத்து இறக்குமதிகள் மற்றும் அஞ்சல் உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டுடனான அனைத்துவிதமான வர்த்தகங்களையும் இந்தியா தடை செய்து வருகிறது. மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு விதிவிலக்கு தேவை என்றால் மத்திய அரசின் முன் ஒப்புதல் அவசியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கப்பல்கள், கப்பல் நிறுத்துமிடங்கள் மற்றும் அஞ்சல் பரிமாற்றங்களை இந்தியா தடை செய்கிறது. குறைந்தபட்ச நேரடி வர்த்தகம் காரணமாக பெரும்பாலும் அடையாளமாக இருக்கும் இந்த நடவடிக்கை, மூன்றாம் நாடு பொருட்களை வழித்தடத்தில் அனுப்புவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் ஏப்ரல் 22-ம் தேதியிலிருந்து பாகிஸ்தான் பங்குச் சந்தை வர்த்தகத்திலும் எதிரொலித்து வருகிறது.
இதுவரை கேஎஸ்இ-100 குறியீடு 8,000 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் பங்குச் சந்தை 6.09 சசதவீத சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா வர்த்தகை தடையையும் விதித்துள்ளது.