டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தினை கடந்து, அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது.
இந் நிலையில் 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் 83,341 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 68,472 என பதிவாகி உள்ளது.
ஆனால், சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும் 62 சதவிகிதம் நோயாளிகள் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 391 இறப்புகளும் 18,105 புதிய தொற்றுகளும் பதிவாகி உள்ளன. தற்போது, 2.05 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 25,586 இறப்புகள் பதிவாகியுள்ளன.
வர்த்தக நகரான மும்பையின் மொத்த தொற்றுகள் 1.50 லட்சத்தை தாண்டி இருக்கின்றன. புனே நகரமானது, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை கொண்ட மற்றொரு இடமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 8,63,062 கொரோனா தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40,14,783 ஆகும். அவர்களில் 8,43,260 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். 31,01,287 பேர் குணம் பெற்றுவிட்டனர். முன்னதாக, உலக நாடுகளின் இறப்பு விகிதத்தை கணக்கிட்டு பார்த்தால் இந்தியாவில் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.