இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

மார்ச் 4 ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் அரசியல் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தக பேச்சுவார்த்தைகள், கல்வி, தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் குறித்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சு நடத்துகிறார்.

மார்ச் 9 ம் தேதி வரை நீடிக்க உள்ள இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லாம்மியுடன் நேற்றிரவு பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பு நடைபெற்ற இடத்திற்கு வெளியே திரண்ட காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராக கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு வெளியே வந்த ஜெய்சங்கரின் கான்வாய் முன் ஓடிச் சென்ற ஒரு நபர் இந்திய கொடியை கிழித்தார்.

அவரை இங்கிலாந்து காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து ஜெய்சங்கர் அங்கிருந்து புறப்பட்டார்.

ஜெய்சங்கரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குறைபாடு குறித்து இங்கிலாந்து அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.

மேலும், பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் இந்த போராட்டம் ஜனநாயக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதை கண்டித்துள்ளது.