கொழும்பு
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 290 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற 7 பேர் காணவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் 7 பேரும் மதச்சார்பற்ற ஜனதா தள தொண்டர்கள் ஆவார்கள்.
கர்நாடக பயணிகள் தங்கி இருந்த சக்கரி லா ஓட்டலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதில் இந்த ஏழு பேரில் இருவர் மரணம் அடைந்துள்ளதை இந்திய உளவுத்துறை அறிவித்துள்ளது. மற்ற 5 பேர் நிலை குறித்து எதுவும் தெரியாத நிலை உள்ளது. அவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதல் குறித்து சுமார் 10 தினங்கள் முன்பு இலங்கை காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து சென்ற 11 ஆம் தேதி இலங்கை காவல்துறை உயர் அதிகாரி புஜன் ஜெயசுந்தர “அண்டை நாட்டு உளவு அமைப்புக்களின் தகவலின்படி தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த உள்ளது” என சுற்றரிக்கை அனுப்பி உள்ளார்.
ஆயினும் தேவாலயங்களில் தான் இந்த குண்டு வெடிப்பு முதலில் தொடங்கி உள்ளது. இந்திய அரசின் எச்சரிக்கையை இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று நடந்த குண்டு வெடிப்புக்கு பிறகு இந்திய தூதரக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.