டெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 270க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், 48 மணி நேரத்துக்குள்ளாக பிரதமர் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி ) நடைபெற உஎள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினமே மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிய வரும்.
இந்த பரபரப்பான சூழலில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர், ஜெயராம் ரமேஷ், “இந்த தேர்தலில் நாங்கள் தெளிவான, தீர்க்கமான பெரும்பான்மையைப் பெறுவோம். எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கைக்குள் நுழைய விரும்பவில்லை. 273 என்பது தெளிவானது ஆனால் தீர்க்கமானது அல்ல. தெளிவான மற்றும் தீர்க்கமான பெரும்பான்மை என்று சொன்னால், அது 272 க்கு மேல் என்று அர்த்தம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் வறியவர், 2004 தேர்தல் முடிவுக்குப் பிறகு 3 நாட்களுக்குள் டாக்டர் மன்மோகன் சிங்தான் பிரதமர் என அறிவித்தோம். பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சோனியா காந்தி தெளிவுபடுத்திய பிறகு, டாக்டர் மன்மோகன் சிங்தான் பிரதமர் என்பது அனைவருக்கும் தெரியும் என்றவர், ஆனால், இம்முறை 48 மணி நேரம்கூட தேவைப்படாது என்றே எண்ணுகிறேன். எந்த கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளதோ அந்த கட்சி, கூட்டணி ஆட்சியை வழிநடத்தப் போகிறது.
முதல் இரண்டு கட்ட தேர்தலுக்குப் பிறகு, மாற்றத்துக்கான காற்று வீசுவது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. தென் இந்தியாவில் பாஜக முழுமையாக துடைத்தெறியப்படும். வடக்கிலும் அதன் எண்ணிக்கை பாதியாகக் குறையும் என்றவர், இந்தமுறை, கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றிபோல, தெளிவான மற்றும் தீர்க்கமான பெரும்பான்மையை இண்டியா கூட்டணி பெறும் என்பதில் சந்தேகமும் இல்லை என்றார்.
இந்த வெற்றிக்கு காரணம், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைதான் என்றவர், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், ஐந்து கருப்பொருள்களில் வெவ்வேறு உத்தரவாதங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை நாங்கள் எங்கள் கருத்துக்களை, வலுவாக, கூர்மையாக, தெளிவாக முன்வைத்துள்ளோம், இது மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றவர், இந்த முறை நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.