லண்டன்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தியாவின் 268 என்ற சாதாரண ரன்களை எட்ட முடியாமல், வெறும் 143 ரன்களுக்கு பரிதாபமாய் சரணடைந்தது மேற்கிந்திய தீவுகள். இந்தியாவின் பவுலிங் பட்டாளர் அந்தளவிற்கு மேற்கிந்திய தீவுகளைப் படாய்படுத்தியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கடந்த போட்டியைப் போலவே இந்தமுறையும் பேட்டிங்கில் சொதப்பியது. ரோகித் ஷர்மா இந்தமுறை வெறும் 18 ரன்களில் அவுட்டானார். கேப்டன் கோலி மட்டுமே பொறுப்பாக ஆடி 72 ரன்களை அடித்தார். அவர் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக அடிக்கும் 4 அரைசதமாகும் இது. தோனி 56 ரன்களை அடித்தாலும், அடித்தாட வேண்டிய தருணத்தில் அவரின் மந்தமான ஆட்டம் கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.

ஆல் ரவுண்டர் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தனர். விஜய் ஷங்கர் இந்தப் போட்டியிலும் சொதப்பினார். இவர் எதற்காக அணிக்குள் இருக்கிறார்? என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை. கடைசியில், 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது.

பின்னர், களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ். கடந்த முறை ஹாட்ரிக் எடுத்த முகமது ஷமி இப்போட்டியிலும் பெரியளவில் மிரட்டினார். அவர் தனது வேகத்தால் மேற்கிந்திய தீவுகளின் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

பும்ராவும் சாஹலும் தலா 2 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். குல்தீப் மற்றும் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சுனில் அம்ப்ரீஸ் மட்டுமே அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். அவருக்கடுத்து பூரான் 28 ரன்களை அடித்தார். வேறு யாரும் சொல்லிக்கொள்ளும் ரகம் இல்லை. கிறிஸ் கெயில் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏற்கனவே பறிபோய்விட்டது.

இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 11 புள்ளிகளைப் பெற்ற இந்தியா, தனது அரையிறுதி வாய்ப்பை வலுவாக்கியுள்ளது. அடுத்து ஆடவுள்ள 3 போட்டிகளில் இன்னும் 1 வெற்றியைப் பெற்றாலே, இந்தியா அரையிறுதியில் நுழைந்துவிடும்.