சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்களை எடுக்க, பதிலுக்கு இங்கிலாந்தோ 134 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. மொத்தம் 195 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்ற இந்தியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில், 286 ரன்களைக் குவித்தது. இதன்மூலம், இங்கிலாந்துக்கு 482 ரன்கள் என்ற மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 53 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பின்னர், நான்காம் நாள் ஆட்டம் துவங்கிய பிறகும், இந்திய சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
கேப்டன் ஜோ ரூட் ஓரளவு சமாளித்தாலும், 33 ரன்களுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அக்ஸார் பந்தில் வெளியேறினார். இறுதியாக மொயின் அலி, இதற்குமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற வகையில் அதிரடி காட்டினார். மொத்தமே 18 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசினார். கடைசியாக குல்தீப்பின் பந்தில் ஸ்டம்பிட் செய்யப்பட்டார்.
மொத்தமாக, 54.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 164 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி, 317 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.
கடந்தப் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா, தற்போது அதைவிட பெரிய வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், தற்போதைய நிலையில் 1-1 என்ற சமன் ஆகியுள்ளது.