பெர்ன்: காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60லட்சம் பேர் மரணம் அடைவதாகவும், காசு மாசுபாட்டில் இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக உலக சுற்றுச்சுசூழல் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. 5% நாடுகள் மட்டுமே WHO PM2.5 காற்று மாசு வழிகாட்டுதலை சந்திக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் காற்று மாசுடைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக 132 நாடுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாராத கண்காணிப்பு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 7,300 நகரங்களின் காற்றின் தரவுகளின் முடிவுகளை இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலகின் மாசுடைந்த 10 நகரங்களின் நாடுகளின் பட்டியலை வரிசைப்படுத்தியுள்ளது. உலகின் மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாட் என்ற நாடும் இடம் பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் ஈராக், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான், தொடர்ந்து பக்ரைன், வங்கதேசம், பர்கினா பாசோ, குவைத், இந்தியா, எகிப்து மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் மிகவும் மாசுடைந்த நாடுகளில் இந்தியா 8 ஆவது இடத்தில் உள்ளது. எனினும், இந்தியா 2021 ஆம் ஆண்டில் 5 ஆவது இடத்தில் இருந்து 8 ஆவது இடத்திற்கு மாறியுள்ளதால், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனாலும் கூட, உலகில் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முதல் 10 இடங்களுக்குள் 6 இந்திய நகரங்களும், முதல் 20 இடங்களில் 14 நகரங்களும், முதல் 50 இடங்களுக்குள் 39 நகரங்களும், முதல் 100 இடங்களுக்குள் 65 நகரங்களும் உள்ளன.
உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 50 நகரங்களில் டெல்லி 4 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை டெல்லிக்கு அடுத்தபடியாக கொல்கத்தா இருந்தாலும் உலக அளவில் 99 வது இடத்தில் அதிக மாசுபட்ட நகரமாக உள்ளது. அதேவேளை, உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான அளவை விட 5 மடங்கு மாசுபாடு அதிகமாக இருந்தாலும் கூட, ஒப்பீட்டு அளவில் சென்னை நகரம் உலக அளவிலான பெருநகரங்களில் தூய்மையானதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. மாசுபட்ட உலக நகரங்களில் டெல்லி 4 வது இடத்தில் உள்ள நிலையில், சென்னை 682 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோடான் நகரங்களும், தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி ஆகிய நகரங்களும் உள்ளன. இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாக, தொடர்ந்து பிவாடி தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலக மக்கள் நல்வாழ்வு கழகம் அறிவித்துள்ள காற்று மாசு அளவான 2.5 பிஎம் (particulate matter) அளவைவிட, 7 மடங்கு அதிகமாக இந்தியாவில் உள்ள 60 விழுக்காடு நகரங்கள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட் ( Chard) (89.7 µg/m3) WHO PM2.5 ஆண்டு வழிகாட்டுதலை விட 17 மடங்கு அதிகம்
ஈராக் (80.1 µg/m3) WHO PM2.5 ஆண்டு வழிகாட்டுதலை விட 16 மடங்கு அதிகம்.
WHO PM2.5 ஆண்டு வழிகாட்டுதலை விட பாகிஸ்தான் (70.9 µg/m3) 14 மடங்கு அதிகம்.
பஹ்ரைன் (66.6 µg/m3) WHO PM2.5 வருடாந்திர வழிகாட்டுதலை விட 13 மடங்கு அதிகம்.
பங்களாதேஷ் (65.8 µg/m3) WHO PM2.5 ஆண்டு வழிகாட்டுதலை விட 13 மடங்கு அதிகம்.
131 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மொத்தம் 118 (90%) WHO ஆண்டு PM2.5 வழிகாட்டுதல் மதிப்பு 5 µg/m3 ஐ விட அதிகமாக உள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டம் 2021 இல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட 13 நாடுகளில் இருந்து இந்த ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள 19 நாடுகளாக அதிகரித்தாலும், ஆப்பிரிக்கா மிகவும் குறைவான பிரதிநிதித்துவ கண்டமாக உள்ளது. 54 நாடுகளில் 19 நாடுகளில் மட்டுமே போதுமான காற்றின் தர தரவு உள்ளது.
உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு உள்ள பத்து நகரங்களில் எட்டு நகரங்களில் மத்திய மற்றும் தெற்காசியாவின் பகுதி இருந்தது.லாகூர் 2022 இல் மிகவும் மாசுபட்ட பெருநகரப் பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.