நம் நாட்டுத் (வீட்டுத்) திருவிழா
பா. தேவிமயில் குமார்
நேசித்திடுவோம்,
நம் தேசத்தினை
சுவாசத்திற்கு இணையாகவே !
இன்றிலிருந்து,
போராட்ட வரலாற்றை
புரட்டிப் பார்ப்போம்
வரலாறாக அல்ல,
வாழ்க்கைப் பாடமாக !
இன்றிலிருந்து,
ஒருவரையொருவர்
வாழ்த்திடுவோம் !
வல்லரசாக, நாம்
வரவேண்டுமென !
சர்வதேச அரங்குகளில்
சாதனை புரிந்திட, நம்
சந்ததிகளுக்கு நல்ல
சக்தியூட்டுவோம் !
இனி,
வடக்கு தெற்கு என
விவாதங்கள் செய்யாமல்,
வேறுபட்டு நிற்காமல்,
ஒன்றாக இணைந்திருப்போம் !
இனி, பாரதத்தின்
பொதுநூல், புனித நூல் என
போராட்ட வரலாறையும்,
அரசியலமைப்பையும்
அறிவித்திடுவோம் !
இனி,
விண்வெளி சாதனையையும்
விவசாயத்தையும் இங்கு
ஒன்றென எண்ணி
வென்றிடுவோம் ! வறுமையை !
இனி !
ஓட்டினைப் பெற
ஓட்டை வழிகளைக்
கடை பிடிப்பவரை
கண்டிப்பாக தடை செய்திடுவோம் !
இனி, இங்கே,
எல்லாக் கடவுளும்,
வாழ்ந்திடும்,
தெய்வீக தேசமிதுவென
தெளிவுபடுத்துவோம்
தெரியாதவர்க்கும் !
இன்று,
தீவிரவாதமும்,
மதவாதமும்,
தேவையில்லையென
தெய்வங்களைத்
தொழுது வணங்கிடுவோம் !
அதோடு,
நோய்த் தொற்றையும்
இயற்கை சீற்றங்களையும்
எதிர்கொள்ள,
எங்களுக்கு சக்தி வேண்டும்
எனவும் வணங்கிடுவோம் !
நம் நாட்டின்
காலநிலை காட்டும்
வேறுபாட்டினை – நம்
மனநிலை காட்டிடும், இம்
மண்ணின் ஒருமைப்பாட்டினை !
இனி,
அரசியலையும், அறிவியல் போல
அறிவுப்பூர்வமாய் அணுகுவோம் !
அது இனி படித்தவர்கள் ஏறும்
படிக்கட்டாக மாறட்டும் !
இன்றிலிருந்து,
ஒற்றுமை எனும்
பாரிஜாத மலர்களால்
அலங்கரிப்போம், நம்
பாரதத் தாயை !
இன்றிலிருந்து !
நேர் மறை எண்ணங்களை
நம் நெஞ்சோடு வளர்ப்போம் !
அது, நம் நாட்டின் நாளைய
அடித்தளமாய் மாறி நிற்கட்டும் !
இனி,
பழம் பெருமைகளை இளம்
பாரதத்தின் புதல்வர்க்கு,
புரியவைப்போம், நாம்
புள்ளினமல்ல புலிக்குட்டிகளென
புரிந்துகொள்ளட்டும் அவர்கள் !
அதன்,
துவக்கமாக,
புன்னகை, புத்தாடை
பொன்னகை அணிந்து,
போற்றி கொண்டாடுவோம்
பாரதத்தின் விழாவை !
இனி, இது நாட்டுத் திருவிழா
என எண்ணிடாமல்,
நம் வீட்டுத் திருவிழாவென
நாளும் கொண்டாடுவோம் !
இன்றிலிருந்து….
இல்லந்தோறும், மட்டுமல்ல
உள்ளந்தோறும் கூட
ஏற்றிடுவோம் ஒளி விளக்குகளை !
ஜெய் ஹிந்த் ! வந்தே மாதரம் !
வாழ்க பாரதம் !
– பா. தேவிமயில் குமார்