சென்னை: சுதந்திர தினவிழாவையொட்டி சென்னையில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை முழுவதும் ரோந்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தையொட்டி முக்கிய இடங்களில் 9,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருகிற 15.08.2024 அன்று 77வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தினத்தை முன்னிட்டு. சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திரன தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் திரு.N.கண்ணன், (தெற்கு), திரு.R.சுதாகர் (போக்குவரத்து), .K.S.நரேந்திர நாயர் ஆகியோர் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளது.
இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு. சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு. முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.