இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடந்தது. இப்போட்டியில் டாஸ்வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ்-ல் 283 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 417 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா.
பின்னர், இரண்டாவது இன்னிங்க்ஸ்-யை துவங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் ஆட்டத்தின் போது, 236 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது. 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 20.2 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் விட்டுக்கொடுத்து 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பார்தீவ் படேல் 67 ரன்கள் குவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்துவரும் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.