சேலம்:  சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், கடலூரில் அதிமுக நிர்வாகி நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்த நிலையில், நேற்று முன்தினம், மயிலாடுதுறையில் விசிக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். அதுபோல நெல்லையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டார். கடந்த 3 நாளில் மட்டும் 4 கொலைகள் அரங்கேறி உள்ளது. இதுபோன்ற கொலை சம்பவங்கள் மக்களிடையே பீதியை கிளப்பி உள்ள நிலையில், தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், போதை பொருள் நடமாட்டங்களை தடுக்க வேண்டிய காவல்துறையினர் என்ன செய்துகொண்டிருக்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி பகுதியைச்  சேர்ந்த சண்முகம் என்பவர்  அதிமுக பகுதி செயலாளராக  இருந்து வருகிறார்.  இவர் கட்சி பணிகளை முடித்து விட்டது, நள்ளிரவு வீடு திரும்பிய நிலையில்,  தாதகாப்பட்டி பிரதான சாலையில்  அவரை நோட்டமிட்டப்படி, 2 இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், கும்பலாக சண்முகத்தின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, அவரை  அரிவாள், கத்தி உள்ளிட்ட  ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த   தாக்குதலில், சண்முகத்தின் தலைப்பகுதி முற்றிலுமாக சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சண்முகத்தின் அலறல் கேட்டு,  அந்த  பகுதியில் உள்ளவர்கள், சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதை கண்ட  கொலையாளிகள் அங்கிருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சண்முகத்தின் உறவினர்களும், அதிமுக கட்சி நிர்வாகிகளும் சண்முகத்தின் உடலை போலீசார் எடுக்கவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சேலம் மாநகரின் துணை காவல் ஆணையர் மதிவாணன் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அரசியல் முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூரில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட போதே கடுமையாக கண்டனங்களை தெரிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர்  மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் .

இந்த நிலையில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில்,   ‘அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘என வலியுறுத்தியுள்ளார்.