சென்னை:  கேன் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில்,  குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு  தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிட்டு, அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயில் காலம் அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கேன் தண்ணீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கேன் தண்ணீர் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி,  குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில்,  தமிழ்நாட்டில் குடிநீர் கேன் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றுவது அவசியம்.

கேன் குடிநீர் நிறுவனங்கள் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறு கூறியுள்ளது.

குடிநீரின் தரம் மற்றும் முறையான அனுமதி இல்லாமல் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

முறையான அனுமதி, அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள், குடிநீர் சுத்திகரிப்பு முறைகள் ஆகியவை முழுமையாக இடம் பெற வேண்டும்

கேன்களின் நிறம் மாறிடும்பட்சத்தில் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்த்திட வேண்டும்.

குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ”உணவு பாதுகாப்புத் துறை விதிகளின்படி சூரியஒளியில் குடிநீரை தேக்கி வைக்கக் கூடாது. உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை வெளிப்படையாக அச்சிடுவது, தொடர்ந்து மாதந்தோறும் குடிநீரின் தரத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி கண்காணித்து அறிக்கையை தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

கால்சியம் ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லி கிராம் என்ற அளவிலும் மெக்னீசியம் ஒரு லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லி கிராம் என்ற அளவிலும் இருப்பதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

குடிநீரில் டிடிஎஸ் (Total Dissolved Solids) குறையும்பட்சத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட கூடும். எனவே குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் குடிநீர் சுத்திகரிப்பில் முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றுவது அவசியம். மேலும், குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் பயன்படுத்த வேண்டும்.

விதிகளை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என  தெரிவித்துள்ளார்.