டில்லி:
செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெற பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஐடி நிறுவனங்களின் தலைநகராக விளங்கும் பெங்களூருவில் ஒரு ஆடிட்டர் (சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்) அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவதற்கு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள், இது தொடர்பான வாட்ஸ் அப் தகவல்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சொத்துக்கள் மூலமான வருவாயில் இழப்பு ஏற்பட்டதாக கூறி செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெற போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரூ. 18 கோடியை திரும்ப பெற ஆயிரம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் செயல்படும் பிரபல ஐபிஎம், வோடாபோன், சாப்லாஸ், பயேகான், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, சிஸ்கோ, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் உள்பட 50 நடுத்தர நிறுவனங்களின் ஊழியர்கள் பெயரில் இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்று அதிக அளவில் திரும்ப பெறுவதற்கான போலி விண்ணப்பங்கள் குவிந்தது இது தான் முதன்முறையாகும்’’ என்றனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டவுடன் சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உண்மையிலேயே சொத்துக்கள் மீதான வருவாய் இழப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதோடு செலுத்தப்ப்டட வரியை திரும்ப பெற்று தருவதாக தங்களை வாட்ஸ் அப் மூலம் ஆடிட்டர் தொடர்பு கொண்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திரும்ப பெறப்படும் தொகையில் ஆடிட்டருக்கு 10 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என்று ஆடிட்டர் கேட்டுள்ளார். ஆனால், ஊழியர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே விண்ணப்பம் செய்ததாக ஆடிட்டர் தெரித்துள்ளார். எனினும் இது குறித்து விசாரணை செய்து போலி விண்ணப்பம் சமர்ப்பித்த குற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.