வெற்றியின் அளவுகோல் வருமான வரி!
16. சொல்லும் பொருளும் சொல்லும் பிரிவு.
இந்திய வருமானவரி சட்டம் 1961.
படித்துப் புரிந்து கொள்ள மிகவும் கடினமான ஒன்று.
நீள நீளமாக வாக்கியங்கள்; வழக்கிழந்து போன வார்த்தைகள்; எதையும் நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்துச் சொல்கிற ‘அதிகார’ மொழி நடை….
மொத்தத்தில், வருமான வரிச் சட்டம் – சாமான்யர்கள் படிப்பதற்கானது அல்ல. மொழி நடைதான் அப்படி. ஆனால் சட்டத்தின் பயன்பாடு அப்படி அல்ல. சாமான்யனுக்கு சாதகமாகப் பல பிரிவுகள், சலுகைகள், விலக்குகள் உண்டு.. யதார்த்தமான அணுகுமுறையும், மனிதாபிமானப் பார்வையும் கொண்ட அற்புதமான கலவை இது.
பார்த்து விடலாமே… என்னதான் இருக்கிறது இந்தச் சட்டத்தில்….?
சட்டம் இப்படித் தொடங்குகிறது:
இந்திய வருமான வரிச் சட்டம் 1961. (43 / 1961)
வருமான வரி மற்றும் ‘சூப்பர் வரி’ தொடர்பான சட்டத்தின் (law) தொகுப்பு மற்றும் திருத்தம் தொடர்பான சட்டம் (Act).
இந்தியக் குடியரசின் 12ஆவது ஆண்டில், நாடாளுமன்றத்தால் (இச்சட்டம்) இங்ஙனம் இயற்றப் பட்டதாக இருக்கட்டும்.
அத்தியாயம் – 1.
தொடக்கம். (Preliminary)
1 (1) – இந்தச் சட்டம், வருமான வரிச் சட்டம் 1961 என்று அழைக்கப் படலாம்.
1 (2) – இது, இந்தியா முழுமைக்கும் நீள்கிறது. (extends to whole of India)
1 (3) – இச்சட்டம், 1962 ஏப்ரல் முதல் நாள் முதல் அமலுக்கு வரும்.
1 (2)க்கான விளக்கம் – இந்தச் சட்டம், இந்தியா முழுமைக்கும் பொருந்துவது.
இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தாலும், இதே சட்ட விதிகள்தாம். மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடாது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால்,
‘ஒரே நாடு; ஒரே வரி’.
1 (3) – ஆங்காங்கே இந்தச் சட்டம், வெவ்வேறு பயன்பாட்டுக்கு வெவ்வேறு தேதிகளைக் குறிப்பிடலாம்.
அவ்வந்தப் பிரிவுகளுக்கு அவ்வந்த தேதிகளைத் தொடர்பு படுத்திக் கொள்ளவும். இதுவும், இதே வாக்கியத்திலே இவ்வாறாக ஆங்கிலத்தில் சொல்லப் பட்டுள்ளது:
‘save as otherwise provided in this Act’.
சரி. இனி, அடுத்த பிரிவுக்குப் போவோமா…?
இந்தியாவில் அநேகமாக எல்லா சட்டங்களிலுமே, பிரிவு 2, ‘definition section’தான்.
அதாவது, சட்டத்தில் பயன்படுத்தப் படும் வெவ்வேறு சொற்களுக்கும் என்ன பொருள் என்பதை
வரையறுத்துச் சொல்வது.
உதாரணத்துக்கு, ‘Person’ என்கிற சொல்லுக்கு நம்மைப் பொறுத்தவரை ‘நபர்’ என்றுதான் பொருள்
ஆனால் சட்டத்தில் இதற்கு இதே பொருளோ, அல்லது அதற்கும் மேற்பட்ட பல அர்த்தங்களோ இருக்கலாம்.
‘ஆள்’ மட்டுமே அல்ல; ஒரு கடை, ஒரு நிறுவனம் (கம்பெனி) கூட, சட்டத்தின் பார்வையில் ‘நபர்’தான்.
இது நமக்கு எப்படித் தெரியும்…? பிரிவு 2, இதனை எடுத்துச் சொல்லும்.
ஒரு சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் அப்படியே சட்டத்திலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறுபட்ட அர்த்தத்தில் ஒரு சொல் பய்னபடுத்தப் பட்டு இருக்குமானால், அதையும் இந்தப் பிரிவு தெளிவாக எடுத்துரைக்கும்.
எந்தச் சட்டத்தைப் படிப்பதாக இருந்தாலும், ஆங்கில அகராதியைப் பார்த்துப் பொருள் தெரிந்து கொண்டு விடலாம் என்று யாரேனும் நினைத்துக் கொண்டு இருந்தால் அது, முற்றிலும் தவறான எண்ணம்.
எந்தச் சட்டத்தையும் ஆங்கில அறிவு / அகராதி மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்ளவே இயலாது. ஆனால், சட்டத்தின் பிரிவு 2, மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பிரிவு 2இல் ஆங்கில வரிசைப்படி சொற்கள், வரிசைப் படுத்தப் பட்டு இருக்கும். சட்டத்தில் உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் சொல்லப் பட்டு இருக்காது. எவை எல்லாம் சட்டத்தில் முக்கியமானதாகவும், சரியாகப் புரிந்து கொள்ள இன்றியமையாததாகவும் இருக்கின்றனவோ, அவற்றுக்கு மட்டுமே தனியாகப் பொருள் தரப் பட்டு இருக்கும்.
ஒரு வேளை நாம் தேடும் ஏதேனும் ஒரு சொல்லுக்கு பிரிவு 2இல் பொருள் தரப் படவில்லை என்றால்…?
அகராதி அல்லது மரபுப் படி என்ன பொருள் உண்டோ அதே பொருளையே எடுத்துக் கொள்ள வேண்டும். சரி. வருமான வரிச் சட்டப் பிரிவு 2இல் முதலில் வருவது –
2 (1) – ‘அட்வான்ஸ் டாக்ஸ்’. (Advance Tax) அதாவது முன் வரி.
‘அத்தியாயம் XVII-C யில் உள்ள சரத்துகளின் படி, செலுத்த வேண்டிய வரியே முன் வரி ஆகும்’.
இதுதான் இந்தச் சட்டத்தில் பெரிய ‘பிரசினை’. அந்த அத்தியாயத்தில் என்ன சொல்லப் பட்டு இருக்கிறதோ அதன் படி, ஒருவர் செலுத்த வேண்டிய வரி என்று சொன்னால் எப்படிப் புரியும்….? ‘அங்கே’ இருப்பதை, இங்கேயே சொல்ல வேண்டியதுதானே….?
ஊஹூம். அப்படிச் செய்ய முடியாது. காரணம்…? அத்தியாயம் 17இன் விவரங்களை இப்போதே சொன்னால், ஒன்றும் விளங்காது. அதனைப் புரிந்து கொள்வதற்கு, இன்னும் பல விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் இப்போதைக்கு ‘அதன்படி’ என்று சொல்லி விடுகிறோம். போகப் போக நமக்கே இந்த ‘நியாயம்’ புரிந்து விடும்.
கவலைப்பட வேண்டாம்.
இப்போதைக்கு ஒன்று மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
முன்னதாகவே செலுத்துகிற வரி – முன் வரி.
எந்தத் தேதிக்கு முன்னதாக…? அல்லது, எது நடப்பதற்கு முன்னதாக…?
பிறகு பார்ப்போம்.
அடுத்து வருவது, மிக முக்கிய சொல்.
இதற்கான பொருளை நாம் மிக நிச்சயமாக நன்றாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்த பல கேள்விகளை, விவாதங்களை, சூழ்நிலைகளை விரிவாக அலசிப் பார்க்க இருக்கிறோம்.
சுவாரஸ்யமான அந்த சொல்….?
Agricultural Income’. ‘விவசாய வருமானம்’!
– வளரும்….