வெற்றியின் அளவுகோல் வருமான வரி – பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

15. எல்லா நாடுகளிலும் இப்படித்தான்!

ந்திய வருமான வரிச் சட்டம் 1961.

ஏற்கனவே சொல்லி இருக்கிறோம் – மிகவும் கடினமான மொழியில்,

அத்தனை எளிதில் யாருக்கும் புரிந்து விடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து ‘தீட்டியதாக’ தெரிகிறது.

முழுப் பக்கத்துக்கும் நீளும் வாசகங்களை சர்வ சாதாரணமாகக் காணலாம். அதுவும் யாரும் பயன் படுத்தாத ‘ஒரு மாதிரியான’ மொழி நடை. ஆங்காங்கே காணப் படும் காற்புள்ளிகளும் அரைப் புள்ளிகளும் நம்மை, ‘உண்டு, இல்லை’ என்று ஆக்கி விடும். இது ஏன் இப்படி இருக்க வேண்டும்…?

வரி விதிப்பு முறையை எளிமையாக்குகிற நோக்கத்துடன், நாடு முழுவதும் இருந்த 17 வகையான மறைமுக வரிகள் அனைத்தையும் ஒன்றாக்கி, ‘ஜி.எஸ்.டி.’, 2017 ஜூலை 1 அன்று,  அறிமுகப் படுத்தப் பட்டு இருக்கிறது. விற்பனை வரி, சேவை வரி, கேளிக்கை வரி என்று, எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது – ‘ஜி.எஸ்.டி.’ எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி.

‘ஒரே நாடு – ஒரே வரி’ என்கிற முழக்கத்தை ஏற்காதவர்களும் எதிர்ப்பவர்களும் இருக்கலாம். அதற்கு அவர்கள் ஏராளமான காரணங்களையும் கூறலாம்.

ஆனால், 2017 ஜூன் 30 வரை இருந்த பல குழப்பங்களை நீக்கி விட்ட ‘ஜி.எஸ்.டி.’, முற்றிலும் எளிமையான வரி விதிப்பை உறுதி செய்கிறது. இதை மட்டும் யாரும் கிஞ்சித்தும் மறுக்க முடியாது.

மாநிலத்துக்கு மாநிலம் பண்டத்துக்குப் பண்டம் மாறுபடும் வரி விகிதம்; ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வகை மதிப்பீடுகள். மாநிலங்கள் விதித்த விற்பனை வரி விதிப்பு முறையில் இருந்த குழப்பங்கள், நிச்சயமற்ற தன்மையும் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஈடுபடப் பலரை உந்துவதாக இருந்தது.

தற்போது நாடு முழுதும் ஒரே வரி என்றான பிறகு, வரி ஏய்ப்புக்கான சாத்தியங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன.

எப்போதுமே, எளிமையான வரி விதிப்பு முறைதான் அதிகம் பயன் தரக் கூடியது. அதேபோல், வரிச் சட்டம் எளிமையாக இருந்தால்தான், சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்கிற பழக்கமும் பக்கு வமும் பரவலாகும். ஆனால், இந்த விதி, வருமான வரிச் சட்டம் பொறுத்த வரை, பின்பற்றப் படவே இல்லை.

சுயமாகப் படித்துப் புரிந்து கொள்கிறாற் போன்று, வருமான வரிச் சட்டம் இல்லை. இந்தப் பாடத்தில், குறிப்பாக சட்டத்தைப் படித்துப் புரிந்து கொள்கிற, ‘வல்லமை’ இருப்பவர்கள் மட்டுமே, வருமான வரிச் சட்டப் பிரிவுகளை விளங்கிக் கொள்ள முடியும். மற்றவர்களுக்கு எல்லாம், ‘கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல்தான்’ இருக்கும்.

‘இதுவெல்லாம் வருமானம்’; ‘இவ்விந்த விலக்குகள் உள்ளன’; ‘இந்த அளவு வருமானத்துக்கு, இவ்வளவு வருமானம்…’ ‘இந்தத் தேதிக்குள் கணக்குகளை, வருமான வரி ‘ரிடர்ன்’களைத் தாக்கல் செய்ய வேண்டும். செய்யத் தவறினால், இன்னின்ன விளைவுகளைச் சந்திக்க நேரும்.’

இவ்வளவுதானே சொல்ல வேண்டியது…? இதனை எல்லாருக்கும் புரியும் படியாக சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே….?

பல முறை, பல தளங்களிலே பல அறிஞர்கள் சொல்லிப் பார்த்தாயிற்று. யாரும் கேட்பதாகத் தெரியவில்லை; எதுவும் நடந்த பாடில்லை.

1940களில் வெளி வந்த தமிழ்த் திரைப் படங்களைப் பார்க்கிற இன்றைய இளைஞன் எப்படி உணர்வான்…?

கிட்டத் தட்ட அத்தகைய உணர்வுதான் வருமான வரிச் சட்டத்தைப் படிக்கிற யாருக்குமே ஏற்படும்.

காலாவதியாகி விட்ட (outdated) மொழி நடையில், காலாவதியாகிப் போன ‘அந்தக் கால’ வார்த்தை களில், படிப்போரை ரண களம் ஆக்குகிறது வரிச் சட்டம்.

நொந்து போக வேண்டாம். மனதுக்கு மிகவும் ஆறுதலான ஒரு செய்தி இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இப்படி என்று இல்லை. உலகம் முழுவதுமே, வரிச் சட்டங்கள் ஏறத்தாழ இப்படி, புரியாத பாஷையில்தான் மக்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.

பிரதமர் மோடி சுட்டிக் காட்டியவாறு,  வருமான வரிச் சட்டம்தான் உண்மையில், எந்தவொரு மனிதனாலும் புரிந்து கொள்ள முடியாத ‘புதிர்’ என்று உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார்.

‘ஐன்ஸ்டீனுக்கே புரியலியாம்….! நம்ம கிட்ட விளக்கம் கேட்கறாங்க…. என்ன கொடுமை சார் இது…!’

பரவாயில்லை. முயற்சித்துப் பார்ப்போம்.  அதற்கு முன்னதாக ஒரு நற்செய்தி.

இந்திய வருமான வரித் துறை, ‘வரிசெலுத்துவோர் தகவல் வரிசை’ (Tax Payers’ Information Series) என்கிற பெயரில், வருமான வரிச் சட்டப் பிரிவுகளை விளக்கி சிறு சிறு புத்தகங்கள் வெளியிடு கிறது.

எளிய நடையில் தரமான தாள்களில் தகுந்த உதாரணங்களுடன் கூடிய, மிகக் குறைந்த விலையில் விற்கப் படும் இப்புத்தகங்கள், வருமான வரி அலுவலகங்களில் மட்டுமே கிடைக்கும். புத்தகக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப் படுவதில்லை.

மிகுந்த பயன் தரக் கூடிய இந்தக் கையடக்க வழிகாட்டிப் புத்தகங்களில் மற்றொரு சிறப்பு இருக்கிறது.

சம்பள வருமானம், வணிக வருமானம், ‘டி.டி.எஸ். (T.D.S.) கடப்பாடுகள்; மூலதன ஆதாயம் (capital gain) என்று, தனித் தனித் தலைப்புகளில் இவை கிடைக்கின்றன. நமக்கு வேண்டிய பகுதிக்கான புத்தகம் மட்டும் வாங்கிக் கொண்டாலே கூடப் போதுமானது.

சட்டப் பிரிவுகள் மட்டுமல்ல; ‘ரிடர்ன்’ நிரப்புவது எப்படி, அதனைத் தாக்கல் செய்வது உள்ளிட்ட தகவல்களும் கூட, சிறு நூலாகத் தரப்பட்டுள்ளன. விலையைக் கேட்டால் அசந்து போவோம். பெரும்பாலான புத்தகங்களின் விலை, ரூ.10 அல்லது 20. அவ்வளவேதான்.

பரவலாக நமக்கு எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், இந்தப் புத்தகங்கள் மூலம், துறையின் உயர் அலுவலர்கள், துல்லியமான பதில் தருகிறார்கள். பாராட்டப் பட வேண்டிய மிக நல்ல முயற்சி. ‘படித்துப் பயன் பெறுங்கள்’.

சரி. இனி……,

சட்டம் இப்படித் தொடங்குகிறது:

இந்திய வருமான வரிச் சட்டம் 1961.  (43 / 1961)

வருமான வரி மற்றும் ‘சூப்பர் வரி’ தொடர்பான சட்டத்தின் (law) தொகுப்பு மற்றும் திருத்தம் தொடர்பான சட்டம் (Act). “இந்தியக் குடியரசின் 12ஆவது ஆண்டில், நாடாளுமன்றத்தால் இவ்விதமாக இயற்றப் பட்டதாக இருக்கட்டும்:

அத்தியாயம் – I

தொடக்கம். (Preliminary)

1. (1) – இந்தச் சட்டம் வருமான வரிச் சட்டம் 1961 என்று அழைக்கப் படலாம்.”

(2) – ………………..

(வளரும்.