வெ.அ.வ.வரி-14: நம் பங்கு; நம் பயன்கள்…. -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

Must read

வெற்றியின் அளவுகோல் வருமானவரி- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

14. நம் பங்கு; நம் பயன்கள்….

‘உலகத்துலயே இந்தியாவுலதான் வருமான வரி அதிகம்னு சொல்றாங்களே…. அநியாயமா இல்லை…? ஏன் இப்படிப் பண்றாங்க…?’

பல பேர் எழுப்புகிற கேள்வி இது. படித்த விவரம் தெரிந்தவர்கள் கூட கேட்கிறார்கள்.

உண்மை என்ன தெரியுமா…? மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடுகிற போது, நம் நாட்டில் வருமான வரி மிகக் குறைவாகவே விதிக்கப் படுகிறது.

ஒரு சிலர் வேண்டும் என்றே திடமிட்டு பரப்பி வருகிற பொய்களில் இதுவும் ஒன்று. அதிலும் சில ‘முற்போக்கு’ பேராசிரியர்கள், எல்லாம் தெரிந்த அதிமேதாவிகள் போல் பேசுவதை அப்படியே நம்புவதால் வருகிற வினை இது.

இன்னொன்றும் சொல்லப் படுகிறது. ‘தனி நபர்களை வஞ்சித்து, ‘கார்ப்பரேட்’களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறது அரசு’. சற்றும் உண்மை கலவாத முழுப் பொய் இதுதான்.

நம் நாட்டில் தனி நபருக்கான வருமான வரி, 10%ல் தொடங்கி, பல்வேறு நிலைகளில் 30% வரை உள்ளது. ‘கார்ப்பரேட்’ வரி எவ்வளவு…? 50 கோடிக்குள் ‘டர்ன் ஒவர்’ கொண்ட உள்நாட்டுக் கம்பெனிகளுக்கு 25%; பிற உள்நாட்டுக் கம்பெனி களுக்கு – 30%;  அயல்நாட்டுக் கம்பெனிகள், 40% கார்ப்பரேட் வரி செலுத்தியாக வேண்டும்.

(இது தவிர, ‘சர்சார்ஜ்’, ‘செஸ்” ஆகியன தனி)

‘செஞ்சீனம்’ நாட்டில் எப்படி…? சீனாவில் தனி நபருக்கு 45% வரி. எல்லாருக்கும்தான். ‘நிலைகள்’ கதை எல்லாம் இந்தியாவில்தான். சீனாவில்….? ‘மூச்’! நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்களோ, அதில் ஏறத்தாழ பாதியை, ‘கேள்வி கேட்காமல்’ அரசுக்குத் தந்து விட வேண்டும்.

ஊஹூம்… அரசே, பாதியைப் பிடுங்கிக் கொண்டு மீதியைத்தான் தரும்.

கார்ப்பரேட்டுகளுக்கு…? 25%தான் வரி. அதிலும் சில துறைகளுக்கு 15%ஆகக் குறைக்கலாமா என்று பரிசீலித்துக் கொண்டு இருக்கிறது சீன அரசு.

உலகின் பல நாடுகளிலும் வரி விகிதம் நம்முடையதை ஒட்டினாற் போலத்தான் இருக்கிறது. சில முன்னேறிய நாடுகளில், நம்மை விடவும் அதிகமாகவும் வரி விதிக்கப்படுகிறது.

இது தெரியாமல், வாய்க்கு வந்ததைச் சொல்லி (எப்போதும் போல) உளறிக் கொண்டு திரிகின்றனர் ‘முற்போக்கு’ பேராசிரியர்கள்.

உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு எல்லாம் ‘வலது’களை வறுத்து எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள். ‘இடது’ பக்கம் பார்க்க மறுப்பது ஏன்…? அரசுக்கு எதிரான மன நிலையை ஏற்படுத்துவதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ளவர்கள் வேறு எப்படி நடந்து கொள்வார்கள்…?

இதனை யாரும் தயவு செய்து அரசியல் கோணத்தில் அணுக வேண்டாம். வரி வசூலிப்பதில், இந்திய அரசு எந்த அளவுக்கு, பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது என்பதை மறைத்து விட்டு, மக்களைத் தவறாக வழி நடத்துவதைக் கண்டிக்கிறோம். அவ்வளவே.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம்.

ஆட்சியில் யார் இருந்தாலுமே, சட்டத்துக்கு உட்பட்டு, ஒருவருடைய தனி மனித உரிமையும் சற்றும் பாதிக்காதவாறுதான், வரி விதிக்கப் படுகிறது; வசூலிக்கப் படுகிறது. இதற்கு மாறாக சொல்லப் படுகிற கருத்துகளை அடியோடு நிராகரிக்க வேண்டும்.

தம்முடைய மிகச் சாதாரண உரிமைகளுக்காகப் போராடிய தன் நாட்டு இளைஞர்களையே, ‘புல்டோசர்’ ஏற்றிக் கொன்ற நாட்டையும் அரசையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற முற்போக்கு சிந்தனையாளர்கள், நேர்மறையான சிந்தனையை மக்களிடம் கொண்டு செல்லவா போகிறார்கள்..?

சரி… ஏன் இத்தனை விஸ்தாரமாக இதைப் பற்றிப் பேசுகிறோம்…?

வரி விதிப்பதும், வசூலிப்பதும் அரசின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று.

நாம் முறையாக வரி செலுத்தினால் மட்டுமே, அந்த நிதியைக் கொண்டு, சாமான்யர்களின் தேவைகளை, ஓர் அரசால் நிறைவேற்ற முடியும்.

‘நமக்குச் சுமை’ என்று சொல்லப் படுகிற வரிகள், உண்மையில் வறியவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிற விளக்கு; அவர்களின் வாழ்க்கைச் சுமையை நாம் பகிர்ந்து கொள்கிற ஒரு வழிமுறை. ஆகவே, ஒரு வேளை, மிக அதிக வரி என்று யாருக்கேனும் தோன்றினால், அதன் மூலம் மிக அதிகமானோர் பயன் பெற இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்.

இன்னொன்றும் நினைவில் கொள்ள வேண்டி இருக்கிறது. நாம் சொல்கிற ‘சாமான்யர்கள்’, ‘வறியவர்கள்’ எல்லாம், யாரோ அல்ல. நாம் ‘வசதியுடன்’ வாழ்கிற இந்தச் சமுதாயத்தில் நம்மோடு பயணிக்கிற சக மனிதர்கள்தாம். அவர்களின் அமைதி யான வாழ்க்கைதான் இந்தச் சமுதாயத்தின் அமைதியை உறுதி செய்யும்.

அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்று தல், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கட்டுக்குள் வைத்து, அன்றாட வாழ்க்கையை சுமுகமாக நடத்த வழி செய்தல் ஆகியன எல்லாம், நாம் தருகிற வரித் தொகையால்தான் சாத்தியம் ஆகிறது. இதையே வேறு ஒரு கோணத்தில் பார்ப்போம்.

நாம் முறையாக வரி செலுத்துகிறோம். (மாறி வரும்) அரசுகளும் மக்கள் நலத் திட்டங்களையும், குறுகிய கால, நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களையும் தொடர்ந்து செயல் படுத்தி வருகின்றன. இதனால் மக்களின் அமைதியான வளர்ச்சி நோக்கிய பயணம் நடைபெறுகிறது. இதுவே, நமது சமூக. அரசியல் அமைப்பை வலுவாக வைத்து இருக்கிறது. நம் எல்லாருக்கும் இது நல்லதுதான்.

ஆனால்.., அரசுக்கு எதிரான மன நிலை எழுந்தால்தான் ‘பிழைப்பு’ நடக்கும் என்று இருப்பவர்கள், இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்…? அதனால்தான், ‘விஷம் போல் ஏறுகிறது விலைவாசி’, ‘வாட்டி வதைக்கிறது வரி விதிப்பு’ என்றெல்லாம் மக்களை அவ்வப்போது ‘உசுப்பி விட’ வேண்டி இருக்கிறது.

மக்களாட்சி முறையில் இது போன்ற கண்டனங்களும் எதிர்ப்புகளும் வரத்தான் செய்யும். அதுதான் உண்மையில், ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்து இருக்கும் ஆரோக்கியமான அடையாளங்கள். என்ன ஒன்று… இந்த எதிர்ப்புக ளில் எந்த அளவுக்கு உண்மைக் கலப்பு இருக்கிறது என்பதைப் பார்த்து, தெளிவு பெற வேண்டியது நம்முடைய பொறுப்பு. அவ்வளவுதான்.

இத் தொடரைப் படிக்கிற வாசகர்களுக்கு ஒரு கேள்வி மிக நிச்சயமாக வரத்தான் செய்யும். வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது….. நம்முடைய வருமானம் என்ன.. அதற்கான வரி எவ்வளவு.. அதை எவ்வாறு செலுத்துவது….. இதைப் பற்றிச் சொல்லாமல், எதிர்ப்புகளைப் பற்றி ஏன் பேச வேண்டும்…?

எல்லா நாடுகளிலுமே, வரி விதிப்பு பற்றி வாதப் பிரதி வாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை எல்லாம் அரசுக்குமே கூட நல்ல ஆலோசனைகளை வழிமுறைகளை வழங்குவனவாக உள்ளன. ஆனால் நம் நாட்டில், வரி செலுத்துவதற்கு எதிராக மக்களைத் திசை திருப்பும் முயற்சியாக, அரசின் நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்குவதாக உள்ளது. இது மிகவும் அபாயகரமான போக்கு.

நாம் தருகிற வரித் தொகை, இந்த நாட்டுக்கு, நமது சகோதர மக்களுக்கு நன்மை பயக்கப் போகிறது என்கிற நல்லெண்ணத்துடன் வரி செலுத்துகிற மன நிலையைத் தோற்றுவிக்கத் தவறி விட்டோம். நம்மில் எத்தனை பேர், முழு மகிழ்ச்சியுடன் வரி கட்டுகிறோம்…?

ஒரே ஒரு ரூபாய் வரி கட்டுவதானாலும், முகம் சுளித்துக் கொண்டு கட்டுகிற கசப்பான மன நிலை மறைய வேண்டும்.

பண்டிகைக் காலங்களில் புத்தாடைகளுக்கும் இனிப்புகளுக்கும் எத்தனை இன்பமாய் செலவு செய்கிறோம்…? கையில் சல்லிக் காசு இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது கொண்டாடுகிறோமா இல்லையா…? வரி செலுத்தும் போது இதே மன நிலை வேண்டும். அதுதான் நமக்கும் நம் நாட்டுக்கும் மிக நல்லது.

போதும். போதும். இனி, வருமான வரிச் சட்டத்தை, ஒவ்வொரு பிரிவாய், இயன்ற வரை, ஒவ்வொரு வரியாய்ப் பார்ப்போமா…?

( வளரும்….

More articles

9 COMMENTS

Latest article