வெற்றியின் அளவுகோல் வருமான வரி!
11. தேடினால் கிடைக்கும்?
‘என்ன சொல்லுங்க…. நம்மள மாதிரி மாச சம்பளம் வாங்கு றவங்கதான் வருமான வரின்னா பயந்து போய்க் கிடக்கிறோம்….. ‘பெரிய பெரிய’ ஆளுங்க எல்லாம், ஏய்ச்சுக் கிட்டுதானே இருக்காங்க…? அவங்களை என்ன பண்ண முடியுது…?’
இப்படி ஒரு மனக்குறை பலருக்கு இருக்கிறது. அதிலும், பணக்காரர்கள் என்றாலே மோசம் ஆனவர்கள் என்கிற தவறான சிந்தனை மிகச் சரியாக விதைக்கப் பட்டு இருக்கிறது.
ஆமாம். சினிமாவின் பாதிப்புதான். தமிழகத்தைப் பொருத்த வரை, அநேகமாக எல்லாத் தவறுகளுக்குமே ஏதோ ஒரு வகையில் சினிமாதானே காரணமாக இருக்கின்றது…..?
இருக்கட்டும். பிரசினைக்கு வருவோம்.
ஏழை – பணக்காரன் என்கிற பாகுபாட்டை வருமான வரிச் சட்டம் ஊக்குவிக்கிறதா…?
மிக நிச்சயமாக இல்லை.
ஆண்டுக்கு ரூபாய் 2,50,000 வரை அடிப்படை விலக்கு. இன்னும் சில நிவாரணங்கள், கழிவுகள், விலக்குகள், தள்ளுபடி கள் என்று குறைந்த வருமானம் உள்ளவர்களுக்குத்தான் ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகிறது இச் சட்டம்.
மேலே செல்லச் செல்ல, அதாவது, வருமானம் உயர உயர, வரி விகிதமும் உயர்ந்து போகிறது. செல்வந்தர் வரி (super rich tax) என்று அழைக்கப் படுகிற கூடுதல் வரியும் சேர்த்து விதிக்கப் படுகிறது.
கீழே குறுகலாகவும் மேலே அகன்றதாகவும் இருக்கிற ‘progressive taxation’தான் இந்திய வருமான வரிச் சட்ட கட்டமைப்பாக இருக்கிறது. ஆகவே இச் சட்டம், ஏழையை வதைத்து செல்வந்தர்களை சீராட்டுகிறது என்கிற குற்றச்சாட்டு அபத்தமானது; அதாவது, சினிமாத் தனமானது.
சட்டம், கட்டமைப்பு… எல்லாம் கிடக்கட்டும்.
பெரிய அளவில் வரி கட்டாமல் ஏய்க்கிறவர்கள் இருக்கிறார்களா… இல்லையா…?
அவர்களை என்ன செய்ய முடிகிறது…?
இத்தகையோரைக் கையாள்வதற்காகவே, சட்டம் சில சிறப்புப் பிரிவுகளைக் கொண்டு இருக்கிறது. இதன் மூலம், கூடுதல் அதிகாரங்களை வரித் துறைக்கு வழங்கி இருக்கிறது. இவற்றின் கீழ்தான்,
‘ஆய்வு’ ‘தேடுதல்’… புரியவில்லையா…? ‘சர்வே’, ரெய்டு’ எல்லாம் நடைபெறுகிறது.
ரெய்டு (‘raid’) அல்ல; ‘ஸர்ச்’ (search) என்கிற சொல்தான் சரியானது.
(கீழே தரப் பட்டுள்ள, பிரிவு 132 பாருங்கள்)
வருமான வரிச் சட்டம் அத்தியாயம் 13; பாகம் ‘சி’ – ‘அதிகாரங்கள்’ (Powers) என்கிற தலைப்பில்,
பிரிவு 131 தொடங்கி பிரிவு 136 வரை 6 பிரிவுகளைக் கொண்டு இருக்கிறது. இந்தப் பாகம்தான் வருமான வரித் துறையின் சோதனைக்கு வழி கோலுகிறது.
சாட்சிய ஆவணகளைக் கண்டுபிடித்தல் – பிரிவு 131;
தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (search and seizure) – பிரிவு – 132;
கணக்குப் புத்தகங்களைக் கோருதல் – பிரிவு 132A;
தகவல்கள் கோரும் அதிகாரம் – பிரிவு 133;
ஆய்வு செய்வதற்கான அதிகாரம் – பிரிவு 133A;
சில குறிப்பிட்ட தகவல்களை சேகரித்தல் – பிரிவு 133B.
‘கம்பெனி’களின் ‘ரிஜிஸ்டர்’களை ஆய்வு செய்தல் – பிரிவு 134.
மேற்கூறிய 4 பிரிவுகள்தாம் நேரடியாக ‘தேடுதல்’ மற்றும் ‘ஆய்வு’ பற்றிய விவரங்களக் கூறுகின்றன.
இவற்றின் படி, கணக்குப் புத்தகங்களைக் கேட்டுப் பெற, வணிக இடங்களில் ஆய்வு செய்ய,
தங்கி இருக்கும் வீடு உள்ளிட்ட எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நுழைந்து தேடிக் கண்டு பிடிக்க,
வரித் துறை அலுவலர்களுக்கு சட்டம் அனுமதி வழங்குகிறது.
இவ்வாறு தேடல் மற்றும் ஆய்வுகள் மூலம் வெளிக் கொண்டு வரப்படும் பணம், நிதி மீது
வருமான வரி, வட்டி, அபராதம் முதலியன விதிக்கப் படும்.
கணக்கில் காட்டாது மறைத்த காரணத்துக்காக,
குற்ற நடவடிக்கைகளும் (Prosecution proceedings) மேற்கொள்ளப் படும்.
ஒரு சில, வெகு ‘அபூர்வமான’ சூழ்நிலைகளில்,
தவறு இழைத்தவரைக் கைது செய்வதற்கான அதிகாரமும்
வழங்கப் பட்டு இருக்கிறது.
வரி வசூல் நடவடிக்கைகளின் (Tax Recovery proceedings) ஒரு பகுதியாக
இதனைச் சட்டம் குறிப்பிடுகிறது.
தேடுதல் மற்றும் ஆய்வுக்கான ‘சம்மன்’, விசாரணைக்கு நேரில் வரச் சொல்லி விடுக்கப் படும் ‘நோட்டிஸ்’,
இது போன்ற சமயங்களில் வரி செலுத்துவோருக்கு உள்ள உரிமைகள்…. போன்ற பல தகவல்களை, பிறகு விரிவாகக் காண இருக்கிறோம்.
வரி வசூலிப்பது மட்டுமே அன்றி, கணக்கில் காட்டப் படாத கருப்புப் பணத்தை வெளிக் கொணருகிற சமுதாயக் கடமையும் கூடுதலாக ‘கவனிக்க’ வேண்டி உள்ளதால், புலன் விசாரணைப் பணியிலும் வருமான வரித் துறை, செயல் பட வேண்டி வருகிறது. இந்தக் கூடுதல் கடமைதான், மக்கள் கூர்ந்து நோக்குகிற ஒரு துறையாக வருமான வரித் துறையை வைத்து இருக்கிறது.
கண்காணித்தல், கண்டுபிடித்தல், சேகரித்தல், ஆய்வு செய்தல், தண்டித்தல், தவறு நேராமல் தடுத்தல் என்று பல பணிகளை, ஓர் ஆண்டின் 365 நாட்களும் இடையறாது மேற்கொள்கிற இந்திய வருமான வரித் துறை, அரசின் கருவூலத்துக்குக் கொண்டு வந்து சேர்க்கிற நேரடி வரித் தொகைதான், பல்வேறு திட்டங்களாக, சாமான்யர்களின் வாழ்க்கையை முன்னேற்றுகிற கட்டமைப்பு வசதிகளாக, மீண்டும் மக்களுக்கே சென்று சேர்கிறது.
ஆம்.
வருமான வரியாக நாம் செலுத்துகிற ஒவ்வொரு ரூபாயும்தான், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துகிற சக்தி வாய்ந்த சாதனம்.
ஆனால், இந்த ஒவ்வொரு ரூபாயையும் சேகரிப்பதற்கு, வரித் துறை ஆற்றுகிற பணி இருக்கிறதே….
அப்ப்பப்பா! அபாரம்.
அப்படி என்னதான் செய்கிறது இந்தத் துறை….?
( தொடரும்…)