சென்னை: தி.மு.க. இளைஞர்அணி அமைப்பாளருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
சென்னையில் தி.மு.க. பிரமுகர் மற்றும் திரைப்பட இயக்குனருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிழக்கு பகுதி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ். இவர் மகாலட்சுமி கட்டுமான நிறுவனம் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் வாங்கி கட்டிடங்கள் கட்டிக்கொடுத்துவருகிறார். இந்த நிறுவனம் சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ளது. இங்கு இன்று காலை வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அவரது வீடு உள்பட நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுபோல, திரைப்பட தயாரிப்பாளர் ஜவகருக்கு சொந்தமான வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்து வருவதாக கூறி இந்த இரு நிறுவனங்களின் உரிமையாளர்கள், உறவினர்கள், அதிகாரிகளின் வீடுகள் என, 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், சோதனையின் முடிவில் அதுகுறித்த விபரங்கள் தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.