விஜயவாடா:
தெலுங்கு தேசம் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவில்,லோக்சபா தேர்தலுடன், சட்டசபைக்கும், வரும், 11ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை களின்போது, தமிகத்தை தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில், முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு தொல்லை கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களின் வீடுகளில், வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான, புட்டா சுதாகர் யாதவுக்கு சொந்த மான, கடப்பா மாவட்டத்தில் உள்ள வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம், எம்.பி.,யும், சந்திரபாபு நண்பரான, ரமேஷ் என்பவரது வீட்டிலும் நேற்று சோதனை நடைபெற்றது.
இதன் காரணமாக கடுப்பான சந்திரபாபு நாயுடு, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அமராவதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் குதித்தார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. அவருடன், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியினரின் பிரசாரத்தை முடக்கும் வகையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். பா.ஜ.,வுக்கும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கும், ரகசிய தொடர்பு உள்ளது.
பிரதமர் மோடியின், மறைமுக உத்தரவின் அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறியவர், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டு, ஜனநாயகத்தை அவமதிக்கிறது. இதன் காரணமாக ஜனநாயக அமைப்புகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் தான், பிரசாரத்தை கைவிட்டு, போராட்டத்தில் குதித்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.