அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டி.யை குறிவைத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தேடியுள்ளனர் என்று சசிகலாவின் சகோதரரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“ஆந்திரா, கர்நாடகா என்று வெளி மாநிலங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள்தான் எங்கள் குடும்பத்தை குறிவைத்து நடந்த சோதனையில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறோம்.
என் வீட்டில் சி.டி.க்கள் குறித்து அதிகாரிகள் எதையும் கேட்கவில்லை. ஆனால் வேறு இடங்களில் சோதனை நடத்தியபோது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சி.டியை கேட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டியை விசாரணை ஆணையத்திடம் அளிப்போம் என்று தினகரன் ஏற்கெனவே கூறியிருந்தார். இதன் அடிப்படையில்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள்” என்று திவாகரன் தெரிவித்தார்.
மேலும் அவர், “தமிழகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்களை வைத்துக் கொண்டு ஆளுநர் ஆய்வு நடத்துகிறார். அநேகமாக ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தமிழிசையை வேட்பாளராக்கி அவரையே முதல்வராகவும் கொண்டுவந்து விடுவார்கள். வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் பாஜக பக்கம் போய்விடுவார்கள்” என்றும் திவாகரன் கூறினார்.