சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரி வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த், 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் வருமான வரி முறையாக கட்டவில்லை என கூறி, 66 லட்சத்து 22 ஆயிரத்து 436 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரி துறை நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இவ்வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1 கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத்துக்கு புதிய வழக்கு தொடருவது இல்லை.
ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்ப பெறுவது என்று கொள்கை முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக கூறி, அதற்கான சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்தனர். மேலும், வருமானவரி துறை மேல் முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.