வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது.

இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்ததால் ஓரளவு கட்டுக்குள் இருந்தது.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,640ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 994 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது வரை 1,621 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.