ஐதராபாத்:

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று அதிகாலை கஜூலாப்பள்ளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்நிலையில் இன்று காலை விபத்து நடந்த இடத்தில் சிலர் ஆம்னி பஸ்சில் எழுதப்பட்டிருந்த பெயர், பதிவு எண், உரிம விபரம் போன்றவற்றை அழிக்கும் பணியில் சிலர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால், அதற்கு முன்பே இந்த ஆம்னி பஸ்ஸை பலர் புகைப்படம் எடுத்துவிட்டனர்.

பின்னர் விசாரணையில் வெங்கட கனகா துர்கா டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் இயக்கப்பட்டு வந்த இந்த பஸ் அருணாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது போல் இதர மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது என்று உள்ளூர் மீடியாக்களில் செய்திகள் வெளியானது.

இதை தொடர்ந்து டூரிஸ்ட் பஸ்கள் என்ற போர்வையில் அருணாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டு, மாநிலத்திற்குள் இயங்காத பஸ்களின் உரிமங்களை ரத்து செய்து அம்மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இது போல் ஆந்திரா, தெலங்கானாவில் 900 பஸ்கள் இயக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில் இயங்காமல் இங்கு இயங்கி வந்த பஸ்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 6ம் தேதி இரு மாநில அரசுகளும் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச போக்குவரத்து ஆணையர் சிராம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கும் 2 கடிதங்களை எழுதினார். அதில் மத்திய அரசின் வாகன சட்டத்தை மீறும் பஸ்கள் மற்றும் இதுபோன்ற பஸ்களின் தேசிய உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தியிருந்தார்.

முகவரி விசாரணை செய்யாமலும், உரிய நேரடி ஆய்வு இல்லாமலும் இந்த பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு தெலுங்கு தேச கட்சி எம்.பி.யும் தொழிலதிபருமான கேசினேனி சீனிவாஸ் என்பவர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தனியார் டிராவல் ஏஜென்சி நிறுவனமான கேசினேனி டிராவல்ஸ் நிறுவனத்தை அதிகாரிகளுடன் சென்று இழுத்து மூடினார்.

வெளி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பஸ்களை இங்கு இயக்குவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த விஜயவாடா எம்.பி. இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பஸ்கள் ஆந்திரா, தெலங்கானாவில் இயக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த நடவடிக்கையை பல தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன.

ஆர்டிசி சங்க பொதுச் செயலாளர் ராஜா ரெட்டி கூறுகையில், ‘‘ தெலங்கானா, ஆந்திராவில் வாகன பதிவுக்கு ரூ. 5 லட்சம் செலவாகிறது. இதே அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 17 ஆயிரம் செலவில் பதிவு செய்யப்படுகிறது.

இதை பயன்படுத்தி தனியார் பஸ் உரிமையாளர்கள பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற முறைகேடுகளை தடுக்க இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக வாய் திறக்காத தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.