டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் காரணமாக, அங்கு படித்து வந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தாயகம் திரும்பி உள்ளனர். அவர்கள் மீண்டும் மருத்துவ கல்வியை தொடர உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழக மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை இந்திய மருத்துவ சங்கமும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் போர் தற்போது முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மருத்துவம் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் அதன் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், உக்ரைனில் படித்து போரால் தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர உக்ரைனின் அண்டை நாட்டு பல்கலைக் கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது தொடர்பாக வெளியுறவுத் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.