டேராடூன்:
உத்தரகாண்ட் வேளாண் அமைச்சர் சுபோத் யுனியா மக்கள் குறைதீர் கூட்டத்தை பாஜக அலுவலகத்தில் நடத்தினார். இதில் குமவுன் மண்டலத்தை சேர்ந்த ஹால்டுவானி நகரம் நை காலனியை சேர்ந்த பாண்டே என்பர் கண்ணீருடன் வந்தார்.
இவர் வாகன போக்குவரத்து தொழில் புரிந்து வந்தார். இவர் இங்கு வரும் போது விஷம் குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த கட்சியினரும், போலீசாரும் பாண்டேவை மீட்டு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இன்று இறந்தார்.
முன்னதாக பாண்டே, ‘‘மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணமாக பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டது’’ என்று அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாண்டே விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. கோரிக்கையை வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு பாண்டே கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், எதற்கும் பதில் இல்லை.
பாண்டேவுக்கு முழு அளவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக ஆளும் பாஜக தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு அவமானகரமானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஹரிஸ் ராவத் மேலும் கூறுகையில், ‘‘நாட்டில் மக்கள் படும் துயரத்தை பாண்டே பிரதிபலித்துள்ளார். அவரை காப்பாற்ற மாநில அரசு எதுவும் செய்யவில்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி.க்கு அடுத்த பலி பாண்டே’’ என்றார்.