டெல்லி:

பணமதிப்பிழப்பு அமலாகி 6 மாத காலமாகியும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பு குறித்த தகவல்களை அளிக்க ஆர்பிஐ மறுத்து வருகிறது. இதை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார நலனுக்கு தீங்கு ஏற்படும் என்று காரணம் கூறியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு மனுவுக்கு ஆர்பிஐ தெரிவித்துள்ள பதிலில் மேலும் குறிப்பிடுகையில், ‘‘நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தையும், அரசின் கொள்கைகளையும் பாதி க்கும் என்பதால் இந்த தகவல்களை அளிக்க முடியாது’’ என தெரிவித்துள்ளது.

ரூ. 500 மற்றும் ரூ. 1,000 செல்லாது என முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தின் மினிட் குறிப்பேட்டின் நகலை அளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரதமர், நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடித தொடர்புகளின் நகல்களையும் அளிக்க வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்தது.

‘‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பிரிவு 8(1)ன் கீழ் இந்த தகவல்கள் நாட்டின் இறையான்மை, நேர்மையை பாதிக்கும். நாட்டின் பாதுகாப்பு, அறிவியல், நிர்வாகம் ஆகியவற்றை பாதிக்கும். அதனால் இந்த தகவல்களின் எந்த பகுதியும் விண்ணப்பதாரருக்கு வழங்க இயலாது.

இதை வழங்கினால் பிரிவு 10ல் கீழான வெளிப்படைத்தன்மை சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். இந்த தகவல்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டவையாகும்’’ என ஆர்பிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.