ஹோசியார்பூர்
பஞ்சாபில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அதில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரை அடுத்த சாஸ்திரிநகரில் உள்ள ஒரு பாலத்தின் அருகே சிலர் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டுகளில் இருந்து பித்தளையை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சக்தி வாய்ந்த ஒரு குண்டு வெடித்து சிதறியது.
இதில் அங்கு பித்தளை பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் உள்பட 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடித்த குண்டு எங்கு தயாரிக்கப்பட்டது, எந்த வகையான குண்டு என்றும், தீவிரவாதிகள் எவரேனும் வைத்து சென்ற குண்டை எடுத்து உடைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த குண்டு வெடிப்பால் பஞ்சாபில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel