திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளாவில் 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.
இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் துபாயில் இருந்து வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கண்ணூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
2வது நபருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவர் கத்தாரில் இருந்து வந்திருக்கிறார். தற்போது அவர் திருச்சூரில் உள்ளார் என்றார்.