ஜம்மு:

காஷ்மீரில் இந்த ஆண்டு மட்டும் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி லக்வியின் உறவினரும் கொல்லப்பட்டான்.

இது குறித்து ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சந்து கூறுகையில், ‘‘ 2017ம் ஆண்டில் இதுவரை 190 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களில் 80 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள். 110 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இவர்களில் 66 பேர் ஊடுருவ முயன்ற போது கொல்லப்பட்டனர். பந்திப்போரா பகுதியில், ரகசிய தகவல் அடிப்படையில், சிஆர்பிஎப், ராணுவம், காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில், 6 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையை வெற்றி பெற செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.செப்டம்பர் முதலே இந்த பகுதியில் தினசரி தேடுதல் பணி நடந்தது. சிறப்பு படைகளும் அனுப்பி வைக்கப்பட்டன’’ என்றார்.

காஷ்மீர் டிஜிபி கூறுகையில், மாநிலத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் யாரும் இல்லை. விரைவில் மாநிலத்தில் அமைதி கொண்டு வரப்படும். வன்முறையிலிருந்து மாநிலத்தை விடுவிப்பதே எங்களின் லட்சியம் எனக்கூறினார்.