பெங்களூரு

ர்நாடக அரசு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த புதிய தற்காலிக விதிகளை  வெளியிட்டுள்ளது.

கடந்த 11 ஆம் தேதி கர்நாடக மாநில அரசு 7 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டது.   இதை எதிர்த்து கல்வி நிலையங்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.   பள்ளிகள் தாங்கள் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப் பணத்தைச் செலவிட்டுள்ளதால் இந்த தடையால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் எனத் தெரிவித்தன.

இதையொட்டி கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கர்நாடகம் மாநில அரசு ஏதாவது இடைக்கால முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.  அதன் அடிப்படையில் ஆன்லைன் வகுப்புக்கள் குறித்த வழிமுறைகள் அமைக்க நிபுணர் குழு ஒன்றைக் கர்நாடக அரசு நியமித்தது.   அந்தக் குழுவின் முடிவு வரும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கான தற்காலிக விதிகளை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த விதிகள் எஸ் எஸ் எல் சி, சி பி எஸ் இ, ஐ சி எஸ் இ உள்ளிட்ட அனைத்து பாடங்களை நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் 30-45 நிமிட நேரம் தினம் இரு வகுப்புக்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது   இதற்கு ஒத்திசைவான கற்பித்தல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கற்பித்தல் குறிப்பிட்ட நேரத்தில் வாரத்தில் 3 நாட்கள் நடைபெற வேண்டும்,   ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அவசியம் வகுப்பில் இடம் பெற வேண்டும்.  6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் தினம் 45 நிமிடங்கள் கொண்ட இரு வகுப்புக்கள் என வாரத்துக்கு 5 நாட்கள் நடத்த வேண்டும்.  9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கும் தினம் 45 நிமிடங்கள் கொண்ட 4 வகுப்புக்கள் என வாரத்துக்கு 5 நாட்கள் நடத்த வேண்டும்.

மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் 30 நிமிடங்களுக்கு அதிகரிக்காமல் ஒரு வகுப்பு நடத்த வேண்டும்.  இந்த சமயத்தில் குழந்தைகளுக்குப் பெற்றோர் உதவ வேண்டும்.