காரைக்குடி
நேற்று மாலை காரைக்குடியில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் வீசிய சூறாவளிக் காற்றால் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன.
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தது. நேற்று மாலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் மழை பெய்தது.
குறிப்பாக அண்ணாநகர், பர்மாகாலனி, வீட்டு வசதியவாரிய குடியிருப்பு பகுதி, செக்காலை, செஞ்சை, கணேசபுரம், மீனாட்சிபுரம், கோவிலூர் சாலை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் 15 நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது. சிலர் மழையில் நனைந்து கொண்டே ஆலங்கட்டியைச் சேகரித்தனர்.
காரைக்குடி மக்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆலங்கட்டி மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர் சூறைக்காற்றும் பலமாக வீசியதால் பெரியார் சிலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரங்களை அகற்றினர். இந்த மழையால் நகரில் மாலை 5.30 மணி முதல் இரவு வரை மின்தடை ஏற்பட்டது.