டில்லி
இந்தியாவில் சென்ற (ஆகஸ்ட்) மாதம் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி இழந்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பணி இழப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் அது மேலும் மோசமானது. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போதிலும் வேலை வாய்ப்பு எண்ணிக்கை முன்னேறவில்லை. இந்தியாவில் அரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் வேலையிழப்பு இருமடங்காகி உள்ளது.
இது குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜூலை மாதம் பணியில் உள்ளோர் எண்ணிக்கை 3993.8 லட்சமாக இருந்தது. அது ஆகஸ்ட் மாதம் 3977.8 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் பணி இழந்துள்ளனர். அதாவது பணி இழந்தோர் ஜூலை மாதம் 6.95% ஆக இருந்தது. அது ஆகஸ்ட் மாதம் 8.32% ஆக உயர்ந்துள்ளது.
இதில் நகர்ப்புறங்களில் ஆகஸ்ட் மாதம் வேலை இன்மை சுமார் 1.5% அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதம் 10.07%, ஜூலை மாதம் 8.3% ஆகக் குறைந்து மீண்டும் ஆகஸ்ட் மாதம் 9.78% ஆகி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு முன்பு அதாவது நகர்ப்புற வேலை இன்மை 7.27% ஆக இருந்தது. அது ஏப்ரல் மாதம் 9.78% ஆக உயர்ந்து மே மாதம் 14.73% ஆனது.
கிராமப்புறங்களில் ஆகஸ்ட் மாதம் வேலை இன்மை சுமார் 4338.6 லட்சமாக அதிகரித்துள்ளது. இது ஜூலை மாதத்தை விட 40 லட்சம் அதிகமாகும். உண்மையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்த கிராமப்புற பணி எண்ணிக்கை கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் கொரோனா தாக்குதலுக்கு முந்தைய எண்ணிக்கை ஆகும். பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் பணி இழப்பு அதிகரித்து தற்போது பலர் கிராமப்புறங்களுக்கு இடம் மாறி உள்ளதே இதற்கு காரணமாகும்.