மும்பை

நேற்றைய பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாகப் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் ரூ. 40000 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சத்தால் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. நேற்று கச்ச எண்ணெய் விலை 30% சரிந்ததால் உலகப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.  வர்த்தகத்தில் நம்பர் 1 ஆகத் திகழும் அமெரிக்க பங்குச் சந்தை உட்பட அனைத்து நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகள் விலையில் கடும் சரிவைச் சந்தித்தன.

இந்தியாவில் சென்ற வார இறுதியில் நடந்த யெஸ் வங்கி முடக்கத்தால் பங்குச் சந்தையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  நேற்று நிஃப்ட் மதிப்பு 6.08% குறைந்தது.  நிஃப்டி பங்கு ஒன்றின் விலை 10294 வரை சரிந்தது.  கடந்த பத்து மாதங்களில் நிஃப்டி பங்குகள் விலை இந்த அளவு சரிவது இதுவே முதல் முறையாகும்.  மும்பை பங்குச் சந்தையில் மதிப்பும் 6.08% குறைந்தது.

இந்த பங்குகள் விலைச் சரிவால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.  இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.1098 வரை குறைந்தது.  கடந்த 11 ஆண்டுகளில் ரிலையன்ஸ் பங்கு விலை இவ்வளவு வீழ்ச்சி அடைந்தது கிடையாது.    நேற்றைய அளவுக்கு ரிலையன்ஸ் பங்குகள் விலை குறைந்ததே இல்லை.

இதனால் நேற்று மதியத்துக்குள் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.4000 கோடி வரை சரிந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.  அதாவது அவருடைய சொத்து மதிப்பு 4160 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.  அந்த மதிப்பில் 12.40% குறைந்துள்ளது. கொரோனா மற்றும் யெஸ் வங்கியின் பாதிப்பு அம்பானியையும் விட்டு வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.