காந்திநகர்: குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தின்  ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ரிவாபா ஜடேஜாiவ எதிர்த்து, ஜடேஜாவின் தங்கை  நைனா ஜடேஜா காங்கிரஸில் சார்பில் களமிறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பரில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ந்தேதி நடைபெறுகிறது. தற்போது அங்கு தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதுவரை ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்ற காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் களமிறங்கி உள்ளன. ஆத்ஆத்மி பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறது.  டில்லி மாடல், பஞ்சாப் மாடல் ஆட்சியை முன்வைத்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி காய்களை நகர்த்தி வருகிறது. இதனால், அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக சார்பில் 160 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய கிரிகெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக வேட்பாளராக களமிறங்க உள்ளார். அவர் ஜாம்நகர் வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாரம்பரியமான  காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஹரி சிங் சோலங்கியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவர் தற்போது பாஜகவின் அங்கமான கர்னி சேனாவின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தார் ரிவாபா. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து, ஜடேஜாவின் தங்கையை களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜடேஜாவின் சகோதரி நைனா வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலில், பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என கட்சித் தலைமை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அதன்படி, மு ன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட பல மூத்த தலைவர்களுக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

ஆனால், ஜடேஜாவின் மனைவி மற்றம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஹர்திக் படேல் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஹர்திக் பட்டேல் விரம்கம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.