பெங்களூரு
இனி வரும் கர்நாடக சட்டமன்ற, இடைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற மோடி அலை உதவாது என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக 2 ஆண்டுகள் பதவியில் இருந்த எடியூரப்பா கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் 2 ஆண்டுகளில் வர உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காகத் தாம் இனி பணி புரியப்போவதாக அவர் அறிவித்தார். வயது மூப்பு காரணமாக முதல் முதல் ராஜினாமா செய்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கர்நாடக மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் உரையாற்றிய எடியூரப்பா, “இனி வரும் கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸை யாரும் குறைவாக எடை போடக் கூடாது. நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் நமது கட்சிக்கு ஒரு எச்சரிக்கையை அளித்துள்ளது. எனவே இனி பாஜக வெற்றிக்கு மோடி அலை உதவாது என்பது தெளிவகி உள்ளது.
அடுத்த வருடம் ஜில்லா பஞ்சாயத்து, தாலுக்கா பஞ்சாயத்து, மேலாவைத் தேர்தல் என தேர்தல் நிறைந்த வருடமாக இருக்கும். மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிக்கு உதவிய மோடி அலை சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் உதவாது. அப்போது மீண்டும் மோடியைப் பிரதமர் பதவியில் அமர்த்த அது உதவியது. எனவே பாஜக தொண்டர்கள் தங்கள் கடின உழைப்பை அளிப்பதன் மூலம் மட்டுமே வெற்றியைப் பெற முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.