243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணிக்கும், லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. தலைமையிலான ’’மகாபந்தனம்’ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இரண்டு கூட்டணிகளிலும் இதுவரை தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
சிறு சிறு கட்சிகளால் இரு கூட்டணிகளிலும், கருத்து வேறுபாடு நிலவுகிறது.
எதிர்க்கட்சிகளின் மகாபந்தனம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆர்.எல்.எஸ்.பி. கட்சி, அந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் மனநிலையில் உள்ளது.
‘’ அந்த கட்சி ஆர்.ஜே.டி. அல்லது காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட வேண்டும்’’ என ஆர்.ஜே.டி. நிபந்தனை விதித்துள்ளதால், ஆர்.எல்.எஸ்.பி. கட்சி அதிருப்தி அடைந்துள்ளது.
இதனிடையே, மகாபந்தனம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 74 தொகுதிகள் ஒதுக்க ஆர்.ஜே.டி. முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவை, முதல்வர் வேட்பாளராக, காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
-பா.பாரதி.