ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், மூன்று சகோதரர்களின் தலைகளைத் துண்டித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லையோர மாகாணம் நங்கார்கர். இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள சபார்கர் மாவட்டத்தை சேர்ந்த 3 சகோதரர்களை சமீபத்தில் அப்பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
சகோதரர்களில் மூத்தவரான நிசார் தரேலிவால் (வயது 27) டாக்டராகவும், நயீம் (24) தடுப்பூசி விழிப்புணர்வாளராகவும், அப்துல் வகாப் (19) மருத்துவ மாணவராகவும் இருந்தனர். இவர்கள் மூவரையும் கடந்த 21-ந் தேதி இரவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்தனர்.
இவர்களின் தந்தையையும் கடந்த ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்திருந்தனர். அவரும் மருத்துவராக பணியாற்றி வந்தார். இதைப்போல 11 விவசாயிகளையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமீபத்தில் கடத்தி சென்றனர். பிறகு அவர்களில் இருவரை மட்டும் அவர்கள் விடுவித்தனர்.
இந்த சம்பவங்களுக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ர் வெளியிடவில்லை. இந்த சம்பவங்களால் நங்கார்கர் மாகாணத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.