சண்டிகர்:

ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்காவுக்கு பணித் திறன் மதிப்பீட்டை குறைத்து ஹரியானா அரசு வழங்கிய மதிப்பெண்ணை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட 9.2 மதிப்பீடு தொடரும் என்றும் அவரது நேர்மையில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்கா 27 ஆண்டுகளில் 52 முறை பணி மாற்றம் செய்யப்பட்டவர்.

நேர்மையான அதிகாரியான இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில், “கேபினட் அமைச்சர் அனில் விஜி எனக்கு பணித் திறன் மதிப்பீடு மதிப்பெண் 9. 92 /10 கொடுத்திருந்தார்.

ஆனால், அதன் பின்னர் எனது பணித்திறன் மதிப்பீடு 9-ஆக குறைக்கப்பட்டது. பல்வேறு கடினமான சூழ்நிலையிலும் கேம்கா நேர்மையான அதிகாரியாக இருந்துள்ளதாக மதிப்பீடு வழங்கும் பொறுப்பிலுள்ள அமைச்சர் அனில் விஜி குறிப்பிட்டுள்ளார்.

எந்த பணியையும் சிறப்பாக செய்ததால் கேம்காரவுக்கு 9.92/10 மதிப்பெண் கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் எனக்கு வழங்கப்பட்ட 9.92 மதிப்பெண்ணை 9-ஆக முதல்வர் மனோகர் லால் கத்தார் குறைத்துவிட்டார்.

இதுகுறித்து தலைமைச் செயலர் உட்பட இது தொடர்பான துறை அதிகாரிகளிடம் முறையிட்டேன்.

எனினும் முதல்வர் மனோகர் லால் கத்தார் சட்டப்பேரவையில் பேசும்போது, அரசின் முடிவை ஐஏஎஸ் அதிகாரி கேம் கா ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எனது பணித் திறன் மதிப்பீடு குறைக்கப்பட்டதை எதிர்த்து மத்திய தீர்ப்பாயத்தில் முறையிட்டேன். கேம் காவின் பணித்திறன் மதிப்பீட்டை குறைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டு என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது தீர்ப்பாயம்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளேன்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ” ஏற்கனவே மதிப்பீட்டு குழுவின் தலைவராக இருக்கும் அமைச்சர் அனில் விஜி, அசோக் கேம்காவின் பணித்திறன் மதிப்பீடாக 9. 92 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.

கேம்காரின் நேர்மையையும் சிறந்த பணியையும் காரணங்களாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பிறகு ,பணித்திறன் மதிப்பீட்டை குறைத்தது அரசியல் உன் நோக்கம் கொண்டதாகும். எனவே கேம்காவின் பணித் திறன் மதிப்பீடு 9.92 லிருந்து 9 ஆக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்கிறது.

மேலும் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 9.92 மதிப்பெண் தொடர வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்காவின் நேர்மை மீது எங்களுக்கு துளியும் சந்தேகம் இல்லை.

மேலும் இவருக்கு மதிப்பெண்ணை 9-ஆக குறைத்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்ற சண்டிகார் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்கிறது.

இவ்வாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.